ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் செலவிட்ட தொகை: சஜித் 112 கோடி

0
26

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு அறிக்கை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பிரசித்தப்படுத்தியுள்ளது.

அதன்படி, சுயாதீனமாக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மொத்த தேர்தல் செலவு 99 கோடியே 3 இலட்சத்து 27 ஆயிரத்து 687 ரூபாய் 16 சதம் ரூபாய் (99,03,27,687.16) ஆகும்.

அதில் விளம்பரப்படுத்தல் மற்றும் பிரசித்தப்படுத்தலுக்காக 39 கோடியே 29 இலட்சத்து 68 ஆயிரத்து 122 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரங்களை டிஜிட்டல் ஊடக விளம்பரப்படுத்தலுக்காக 10 கோடியே 71 இலட்சத்து 12 ஆயிரத்து 903 ரூபாயும் மேடை, ஒலிவாங்கி போன்ற செலவுகளுக்காக 2 கோடியே 39 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட மற்றும் அச்சிட (துண்டுப்பிரசுரம், சுவரொட்டி, விளம்பரப்பலகை) 28 கோடியே 96 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 52 கோடியே 79 இலட்சத்து 99 ஆயிரத்து 889 ரூபாய் 38 சதம் செலவிட்டுள்ளார். கட்சிக்கு நன்கொடையாக 53 கோடியே 98 இலட்சத்து 95 ஆயிரத்து 305 ரூபாய் கிடைக்கப்பட்டுள்ளது.

அவருடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான துண்டுப் பிரசுரங்கள், விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றுக்காக 24 கோடியே 53 இலட்ச 7 ஆயிரத்து 815 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களுக்காக 17 கோடியே 24 இலட்சத்து 72 ஆயிரத்து 282 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கான செலவுகளாக 23 இலட்சத்து 56 ஆயிரத்து 750 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவை மொத்த செலவினங்களுக்குள் உள்ளடங்குகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் மொத்த செலவு 38 கோடியே 89 இலட்சத்து 39 ஆயிரத்து 85 ரூபாய் ஆகும்.

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட 33 இலட்சத்து 59 ஆயிரத்து 750 ரூபாயும், விஞ்ஞாபனத்தை அச்சிட 7 கோடியே 93 இலட்ச 7 ஆயிரத்து 800 ரூபாயும் பிரசார கூட்டங்களுக்காக 20 கோடியே 53 இலட்சத்து 71 ஆயிரத்து 450 ரூபாயும், ஊடக பிரசாரங்களுக்காக 2 கோடியே 31 இலட்ச 44 ஆயிரத்து 987 ரூபாய் ஆகும். இது மொத்த செலவுகளில் உள்ளடங்கும்.

இதேவேளை, சர்வஜன பலய கட்சியின் வேட்பாளர் திலித் ஜயவீரவுக்கு ஜனாதிபதி தேர்தல் செலவீனங்களாக 1 கோடியே 32.4 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு 112 கோடியே 9 இலட்சத்து 79 ஆயிரத்து 151 ரூபாய் 60 சதம் ஆகும். (11,20,979,151.60)

அச்சு பதிப்புகள், விளம்பரங்கள், துண்டுப்பிரசுங்கள் விநியோகம் போன்றவற்றுக்காக 4 கோடியே 15 இலட்சத்து 99 ஆயிரத்து 620 ரூபாய் (41,599,620) செலவழிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விளம்பரங்களுக்காக (தொலைக்காட்சி, வானொலி) 55 கோடியே 24 இலட்சத்து 15 ஆயிரத்து 565 ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது. பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கைகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவர், வாக்காளர் ஒருவருக்காக செலவிடப்பட வேண்டிய தொகை 109 ரூபாவாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்ததுடன் அனைத்து வாக்காளர்களுக்காகவும் வேட்பாளர் ஒருவர் செலவிட வேண்டிய மொத்த தொகை 186 கோடியே 82 இலட்சத்து 98 ஆயிரத்து 586 ரூபாய் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.