உக்ரேனிய போர்க்களத்தில் ரஷ்ய மற்றும் வட கொரிய கொடிகளை அருகருகே காட்டும் புகைப்படத்தை ரஷ்யா சார்பு டெலிகிராம் கணக்கு வெளியிட்டுள்ளது.
இது உக்ரைனுடனான நீண்டகால போரில் ரஷ்யாவை ஆதரிக்க வட கொரியா படைகளை அனுப்பியிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கோட்டைகளில் ஒன்றான போக்ரோவ்ஸ்கில் உள்ள ஒரு சுரங்கத்தின் மீது இரண்டு கொடிகள் ஒன்றாக பறக்கவிடப்பட்டுள்ளது.
வட கொரிய வீரர்கள் தங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் ஒன்றான நகருக்கு அருகிலுள்ள சுரங்கத்தில் உள்ள மலையில் வட கொரியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுடனான அதன் நீண்டகாலப் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவளிக்க வட கொரியா சுமார் 12,000 சிறப்புப் படைகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக கடந்த வெள்ளியன்று தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை அறிவித்திருந்தது.
இதன்படி, சுமார் 1,500 பேர் ஏற்கனவே ரஷ்யாவின் தூர கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை குறிப்பிட்டிருந்தது.
வட கொரியா இவ்வளவு பெரிய அளவில் தரைப்படைகளை அனுப்பியது இதுவே முதல் முறையாகும், இருப்பினும் வெளிநாட்டு நாணயத்தை ஈட்டுவதற்காக சிறிய குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருந்தது.
இதுவரை, வடகொரியாவின் அரச ஊடகம் ரஷ்யாவிற்கு தனது படைகளை அனுப்பியுள்ளமை தொடர்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
எவ்வாறாயினும் தென் கொரியா மற்றும் உக்ரைன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ஐக்கிய நாடுகள் சபைக்கான வட கொரிய தூதர் திங்களன்று நிராகரித்தார்.
உக்ரைனில் நடக்கும் போரில் ரஷ்யாவுடன் இணைந்து போரிட இராணுவ வீரர்களை அனுப்புகிறது என்று “ஆதாரமற்ற வதந்திகள்” மாஸ்கோவுடனான அதன் உறவுகள் சட்டபூர்வமானது மற்றும் கூட்டுறவு என்று வாதிட்டார்.
இதனிடையே, வட கொரியாவுடனான ஒத்துழைப்பு “தென் கொரியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக இல்லை” என்று தென் கொரியாவிற்கான ரஷ்ய தூதர் ஜார்ஜி ஜினோவிவ் திங்களன்று கூறினார்.
எவ்வாறாயினும் தென் கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் வட கொரியா தனது இராணுவ வீரர்களை அனுப்புவதை ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் இது சட்டவிரோத செயலாக கருதப்படும்.
“வட கொரியா சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, அவற்றை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாது” என்று 46 தென் கொரிய மாலுமிகளைக் கொன்ற சியோனன் போர்க்கப்பல் 2010 இல் மூழ்கியதை மேற்கோள் காட்டி அந்த அதிகாரி கூறினார்.