நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் பெறவுள்ள தேசிய பட்டியல் ஆசனங்களின் விபரங்கள் தொடர்பில் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
29 தேசியப் பட்டியல் ஆசனங்களில் NPP க்கு 12 உரித்தாகும் சாத்தியம் உள்ளதாகவும் 32 சதவீத வாக்குகளைப் பெற்றால் சஜித் கூட்டணிக்கு 9, 17 சதவீத வாக்குகளை தக்கவைத்துக் கொண்டால் சிலிண்டர் கூட்டணிக்கு 5 கிடைக்க வாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின்போது அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் பெற்றுக்கொண்ட அதே அளவான வாக்குகள் பொதுத்தேர்தலிலும் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அக்கட்சிகளுக்கு எத்தனை தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெறக்கூடும் என்பது பற்றிய கணிப்பே இது.
நாடாளுமன்றத் தேர்தலின்போது 22 தேர்தல் மாவட்டங்களிலும் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் செல்லுபடியற்ற வாக்குகளை கழித்துவரும் செல்லுபடியான வாக்குகளை 29 ஆல் பிரித்தால் தேசிய பட்டியல் ஆசனத்தை ஒதுக்குவதற்குரிய தகுதிகாண் வாக்கு நிர்ணயிக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தலில் செல்லுபடியான மொத்த வாக்குகள் 13,319,616, இதனை 29 ஆல் பிரிக்க வருவது – 459,297. கட்சியொன்று பெற்ற மொத்த வாக்கை, தகுதிகாண் வாக்கால் பிரித்தால் வரும் எண்ணிக்கைக்கேற்ப கட்சிக்குரிய தேசியப் பட்டியல் ஆசனங்கள் முதல் சுற்றில் ஒதுக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு, 5,634,915 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. (5,634,915 / 459,297 – ) இதன் அடிப்படையில் அக்கட்சிக்கு 12 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெறும்.
ஜனாதிபதி தேர்தலின்போது 42 சதவீத வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, அந்த எண்ணிக்கையை 60 வரை அதிகரித்துக்கொண்டால் கடந்த தேர்தலில் மொட்டு கட்சிபோல் 17 தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
(ஆனால் அதற்குரிய சாத்தியம் குறைவு) ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 22 தேர்தல் மாவட்டங்களிலும் 4,363,035 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
அதே அளவான வாக்கு வீதம் பொதுத்தேர்தலிலும் அக்கட்சிக்கு கிடைக்கப் பெற்றால் (4,363,035 / 459,297) 09 தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெறக்கூடும்.
கடந்த பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு போல் இம்முறையும் ஏற்பட்டால் ஆசனங்களில் எண்ணிக்கை ஆறுவரை குறையக்கூடும்.
ஜனாதிபதி தேர்தலின்போது சஜித்துக்கு ஆதரவளித்த தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் தனித்து போட்டியிடுகின்றது. சுயேச்சையாக களமிறங்கிய சிலிண்டர் கூட்டணி 22,99, 767 வாக்குகளைப் பெற்றது.
(22,99, 767 / 459,297) பொதுத்தேர்தலிலும் 17 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெற்றால் ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்களை எதிர்பார்க்கலாம்.
அக்கூட்டணியின் வாக்கு வங்கி 40 வீதத்தால் குறைந்தால்கூட 3 தேசியப் பட்டியல் ஆசனங்களை பெறுவதற்குரிய வாக்கு வங்கி உள்ளது. வாக்கு வங்கி 50 சதவீதத்தால் குறையும் பட்சத்தில் இரு தேசியப் பட்டியல் ஆசனங்களை பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது.
(ஜனாதிபதி தேர்தலின்போது கிடைக்கப்பெற்ற அதே அளவான வாக்குகள் பொதுத்தேர்தலில் கிடைக்கப்பெற்றால் திசைக்காட்டி, தொலைபேசி, சிலிண்டர் கூட்டணிகள் 26 தேசிய பட்டியல் ஆசனங்களை பெற்றுவிடும்.)
எஞ்சிய 3 ஆசனங்கள், மேற்படி கட்சிகளுக்கு அடுத்தப்படியாக கூடுதல் வாக்குகள் பெற்ற கட்சிகளுக்கு தலா ஒரு வீதம் வழங்கப்படும்.
அந்தவகையில் அரியநேத்திரனின் சங்கு கூட்டணிக்கு ஒரு ஆசனமும், திலித் ஜயவீரவின் நட்சத்திரக் கூட்டணிக்கு (தற்போது பதக்கம்) ஒரு தேசியப் பட்டியல் ஆசனமும், நாமல் ராஜபக்சவின் மொட்டு கூட்டணிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனமும் கிடைக்கப்பெறும்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கில் தனித்து போட்டியிடுகின்றது. கடந்தமுறைபோல் இம்முறையும் அக்கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெறக்கூடும்.
ஈபிடிபி வடக்க, கிழக்குக்கு வெளியில் இம்முறை கொழும்பிலும் போட்டியிடுகின்றது. கடந்த முறை சொற்பளவு வாக்கு வித்தியாசத்திலேயே தேசியப் பட்டியல் வாய்ப்பை இழந்தது. இம்முறை கொழும்பிலும் ஈபிடிபி போட்டியிடுகின்றது. ஐக்கிய மக்கள் சக்திக்குரிய வாக்குகள் குறையும்பட்சத்தில் தேசிய பட்டியல் ஆசனமும் குறையக்கூடும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சங்கு கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, மக்கள் போராட்ட முன்னணி, சர்வஜன அதிகாரம், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக ஐக்கிய குரல் என்பனவும் தேசிய பட்டியல் ஆசனத்தை இலக்கு வைத்துள்ளன.
2020 பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் அக்கட்சிக்கு 17 தேசிய பட்டியல் ஆசனங்கள் உரித்தானது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. எஞ்சிய ஐந்து ஆசனங்கள், பொதுத்தேர்தலில் அடுத்த ஐந்து இடங்களைப் பிடித்த கட்சிகளுக்கு தலா ஒரு ஆசனம் வீதம் வழங்கப்பட்டது.
67,758 வாக்குகளைப் பெற்ற எமது மக்கள் சக்திக்கும் ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றது. அத்துரலிய ரத்தன தேரர் சபைக்கு வந்தார்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு மக்கள் வாக்களிப்புமூலம் 196 உறுப்பினர்களும், தேசிய பட்டியல் ஊடாக 29 பேருமாக மொத்தம் 225 பேர் தெரிவு செய்யப்படுகின்றனர்.
இது ஒரு உத்தியோகபூர்வ தகவல் அல்ல எனவும் இவ்வாறான தகவலை ஆர்.சனத் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.