ஈஸ்டர் தாக்குதல்கள்; அனுரவுக்கு சவால் விடுத்த உதய கம்மன்பில!

0
36

நாட்டில் பல உயிர்களை காவு கொண்ட ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான இரண்டு அறிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெளிப்படுத்தாத பட்சத்தில் இன்று நான் பகிரங்கப்படுத்துவேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.

இந்த அறிக்கைகளின் உள்ளடக்கங்களை பாதுகாப்பு-உணர்திறன் விவரங்களுடன் வெளியிடுவதற்கு அரசாங்கத்திற்கு நான் வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவற்றை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த ஜனாதிபதிக்கு இன்று வரை கால அவகாசம் இருப்பதாக தெரிவித்த அவர் இல்லையேல் நான் அதை செய்யப் போகிறேன் என்றார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் நியமிக்கப்பட்ட இந்த அறிக்கைகளின் விவரங்களை வெளியிடும் பட்சத்தில் அரச இரகசியங்களை வெளிப்படுத்திய குற்றத்திற்காக 14 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு அறிக்கை தாக்குதலின் போது உளவுத்துறை எந்திரத்தின் பங்கைக் கையாளுகிறது, மற்றொன்று சனல் 4 ஆவணப்படத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளின் விசாரணையின் பின்னரான கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டதெனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகளில் கத்தோலிக்கர்கள் மாத்திரமன்றி 45 வெளிநாட்டு பிரஜைகள் உட்பட ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளதாக திரு.கம்மன்பில தெரிவித்தார்.