இந்தியா சிறந்த நாடாக மாறிவிட்டது; பிரதமர் மோடிக்கு டிரம்ப் புகழாரம்!

0
92

மோடி பிரதமராக வந்தபிறகு இந்தியா சிறந்த நாடாக மாறிவிட்டது என அமெரிக்க முன்னால் அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இதற்கிடையே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப் பேட்டி அளித்தபோது இந்திய பிரதமர் மோடி பற்றி குறிப்பிட்டார். அதில்,

2014-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன்பு வரை தலைமைத்துவத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு அந்நாட்டில் நிலையற்ற தன்மை காணப்பட்டது. மோடி பிரதமராக வந்தபிறகு இந்தியா சிறந்த நாடாக மாறிவிட்டது.

அவர் என்னுடைய நண்பர். வெளிப்புற தோற்றத்தில் அவர் உங்களது தந்தையை போன்று காணப்படுபவர். அவர் அன்பானவர். ஆனால் இந்தியாவை யாராவது அச்சுறுத்தினால் அவர் முற்றிலும் மாறிவிடுவார்.

இந்தியாவை சிலர் அச்சுறுத்தி கொண்டிருந்த போது, நான் உதவி செய்கிறேன் என நான் மோடியிடம் கூறினேன். அதற்கு மோடி, நான் பார்த்து கொள்கிறேன். அவர்களை நூற்றாண்டுகளாக நாங்கள் தோற்கடித்து வருகிறோம் என கூறினார்.

தேவைப்படும்போது எதிரியை நாடு எதிர்கொள்ள வேண்டிய ஒரு கடின சூழலில் ஒரு தலைவராகவும் இருக்க கூடியவர் என டிரம்ப் கூறினார்.

மேலும் 2019-ம் ஆண்டு டெக்சாசின் ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்வின் போது பிரதமர் மோடியுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதையும் டிரம்ப் நினைவு கூர்ந்தார்.