ஜிலேபி அரசியல்: ராகுல் காந்தியை எரிச்சலூட்டிய பாஜக

0
114

ஹரியானா சட்டமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வீட்டிற்கு ஒரு கிலோ ஜிலேபியை அனுப்பிய ஹரியானா பாஜகவினர் காங்கிரஸின் தோல்வியை கேலி செய்துள்ளனர்.

இந்த ஜிலேபி, டெல்லியின் கனாட் பிளேசிலுள்ள பிகானீர்வாலா கடையில் வாங்கப்பட்டு டெல்லி அக்பர் சாலையிலுள்ள ராகுலின் வீட்டுக்கு கேஷ் ஆன் டெலிவரி முறையில் அனுப்பப்பட்டுள்ளது.

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தன.

இதில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், முடிவுகள் தலைகீழாக மாறியிருந்தது.

முன்னதாக கோஹானா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி கலந்துகொண்டு பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

“கோஹானா ஜிலேபியை, இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும். ஜிலேபிகளை செய்ய தொழிற்சாலைகளை அமைக்கலாம்.

அப்படி அமைத்தால் பல ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவர்” என்றார். கோஹானா ஜிலேபி குறித்து ராகுல் காந்தியின் மிகவும் வைரலாகியிருந்தது.

இந்நிலையில் ஹரியானா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து டெல்லியில் உள்ள ராகுலின் வீட்டுக்கு ஒரு கிலோ ஜிலேபி பாஜகவினர் ஸ்விக்கி மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஹரியானா மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “ஹரியானா மாநில பாஜக தொண்டர்கள் சார்பாக, ராகுல் காந்தியின் வீட்டுக்கு ஜிலேபி அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரசியல் கட்சியின் முக்கியத் தலைவராக உள்ள ஒருவருக்கு எரிச்சலூட்ட வகையில், உள்நோக்கத்துடன் ஜிலேபி இனிப்பு அனுப்புவது என்பது சட்ட ரீதியாக குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.