திலித்துடன் இணைந்தார் மைத்திரியின் மகன்: புதிய பதவியும் வழங்கி வைப்பு

0
76

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம சிறிசேன ஆகியோர் மவ்பிம ஜனதா கட்சியில் இன்று இணைந்துள்ளனர்.

கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர்கள கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டதுடன் அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி மவ்பிம ஜனதா கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளராக ராஜிகா விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக தஹம் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தேசியப் பட்டியலில் மூலம் நாடாளுமன்ற சென்ற ராஜிகா விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் மேடையில் இணைந்துகொண்டார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயருக்குப் பதிலாக மகிந்த ராஜபக்சவின் பெயரைக் குறிப்பிட்டமையால் ராஜிகா விக்கிரமசிங்க அதிகம் கவனிக்கப்பட்ட ஒருவரானார்.

இதேவேளை 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை தொகுதி இளைஞர் குழுவின் தலைவராக தஹம் சிறிசேன நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2022 செப்டெம்பர் முதலாம் திகதி பொலன்னறுவை மேற்குத் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.