தொடர் தோல்விகள்: பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் பதவி விலகினார்

0
27

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் இருந்து நட்சத்திர வீரர் பாபர் அசாம் விலகியுள்ளார். சமீபகாலமாக சர்வதேச போட்டிகளில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ண தொடருக்குப் பின்னர் பாபர் அசாம் தொடர்ச்சியாக ஏமாற்றமளிக்கும் வகையில் துடுப்பெடுத்தாடி வருகின்றார்.

அண்மையில் நடந்து முடிந்த பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவர் மொத்தம் 75 ஓட்டங்களைக் கூட தாண்டவில்லை.

இந்தத் தொடரில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, ஐசிசி முதல் 10 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இருந்து பாபர் அசாமை நீக்கியது, தொடர்ந்து அவரது தலைமைப் பதவியும் கேள்விக்குறியானது.

மேலும் இந்த ஆண்டு நடந்து முடிந்த இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரிலும் அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளுடன் தோல்வியை சந்தித்து குழுநிலை போட்டிகளோடு பாகிஸ்தான் வெளியேறியது.

இதனையடுத்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் யூனிஸ் கான், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் இருந்து உத்வேகம் பெறுமாறு பாபர் அசாமுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், உடற்தகுதி மற்றும் பணி நெறிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாபர் அசாமை அவர் வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான அணித் தலைவர் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகியுள்ளார்.

இந்நிலையில் விரைவில் பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான புதிய தலைவர் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.