மதுபான உரிமங்களை வழங்கிய முன்னாள் அரசியல் தலைவர்கள்: வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

0
35

முன்னாள் அரசாங்கத்தின் கீழ் மதுபான உரிமங்களைப் பெற்று கட்சி மாறிய கண்டி மாவட்டத்தின் சில அரசியல்வாதிகளிடமிருந்து குறித்த அனுமதிப்பத்திரங்களை சுமார் 2 அல்லது 3 கோடி ரூபாய்க்கு வாங்கிய சில வர்த்தகர்களின் குறித்த மதுபான உரிமங்களை இரத்து செய்ய தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்காரணமாக, கண்டி மாவட்டத்தின் முதற்தர மதுபானசாலைகளை நடத்தி வரும் வர்த்தகர்கள் பாரிய சிக்கல் நிலையை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

புதிய அரசாங்கம், புதிதாக வழங்கப்பட்ட மதுபான உரிமங்களை இரத்து செய்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகும் நிலையில் அவ்வாறான ஒரு நிலை ஏற்படின் தங்களது வர்த்தகங்களுக்கு அபாய நிலை ஏற்படுவதாகவும், புதிதாக மதுபானசாலைகளை ஆரம்பித்த வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கண்டி மற்றும் அதனை அண்மித்த பிரதேச சபை பிரிவுகளில் புதிதாக ஆரம்பித்த மதுபானசாலைகள் அதிகளவில் காணப்படுவதாக அரசாங்க உரிமம் பெற்ற மதுபான விற்பனைசாலைகளை வைத்திருக்கும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் மதுபான அனுமதிப்பத்திரத்தை பெரும் தொகைக்கு வர்த்தகர்களுக்கு விற்ற முன்னாள் அரசாங்கங்களின் அரசியல்வாதிகள் பலர் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

மேலும், தனது கட்சியைச் சேர்ந்த எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த அரசாங்கத்திடமும் மதுபான உரிமம் பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.