பொது தேர்தல்: நிதியை விடுவிப்பதற்கு ஜனாதிபதி அனுமதி

0
41

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் பொதுச் செயலாளர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆரம்ப விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் நேற்று (28ஆம் திகதி) இடம்பெற்றன. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதி மாவட்ட செயலாளர்களின் பங்குபற்றலுடன் முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அவர்களும் கலந்துகொண்டார்.

இதேவேளை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி ஆணையாளர்கள், பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பும் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செப்டம்பர் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் கையெழுத்திட்டார்.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் நான்காம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு கோரப்படும் என அரசாங்க அச்சகம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.