எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டதுடன் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அதன் பிரதித் தலைவர் வி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி ஆரம்ப காலம் முதல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட அடித்தளம் இடுவதற்காக இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் வெளிப்படுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்டிருந்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்கள் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியதாகவும் எனினும் அவருக்கு நுவரெலியா மாவட்டத்தில் அதிக வாக்குகள் கிடைக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை உள்ளிட்ட பிரதேசங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஜனாதிபதித் தேர்தலில் ஏனைய வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியை விட்டுச் சென்ற எந்தவொரு உறுப்பினரையும் மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொண்டால் அதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் என வி. ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.