ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று புதன்கிழமை நடைபெற்று வருகிறது. ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 24.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அன்றைய தினம் 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஜம்மு பகுதியில், ரியாசி, ரஜெளரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களிலும் , காஷ்மீா் பகுதியில், ஸ்ரீநகா், புத்காம், கந்தா்பால் ஆகிய மாவட்டங்களிலும் உள்ள 26 தொகுதிகளில் இன்று காலை 07 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமானது.
“ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் முதன் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்றும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி 24 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குபதிவில் மொத்தம் 61.38 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
இன்று 26 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மீதம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒக்டோபர் முதலாம் திகதியன்று 03 ஆம் கட்ட தேர்தல் நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒக்டோபர் 08 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.