ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் எதிர்ப்பார்த்த தரப்பினரிடமிருந்து தனக்கு வாக்குகள் கிடைக்கப் பெறவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுடன் கொழும்பு ப்லவர் வீதியில் (Flower Road) காணப்படும் அரசியல் காரியாலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவு தெரிவித்தாலும் கூட அவர்களுடன் மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது விளங்குவதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் அநுரகுமார திஸாநாயக்கவுக்காக தமது வாக்குகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்ததாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அதன்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு யானை சின்னத்தில் முன்னிலையாவது சிறந்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரிகள் உட்பட கட்சி உறுப்பினர்களும் எடுத்துக்காட்டியுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நான்கு புதிய முகங்களையாவது முன்நிறுத்த வேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.