நாட்டைக் கட்டியெழுப்பும் கூட்டுப் பணியில் அங்கம் வகிப்பது தனது பொறுப்பு என புதிய ஜனாதிபதியாக இன்று (23) பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சற்று முன்னர் பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே புதிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தான் ஒரு மந்திரவாதி அல்ல என்றும் தன்னால் என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டு தான் செயல்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
“நான் மந்திரவாதி அல்ல.. நான் இந்த நாட்டில் பிறந்த ஒரு சாதாரண குடிமகன்.. திறமைகள் உள்ளன.. இயலாமைகள் உள்ளன.. எனக்குத் தெரிந்த விஷயங்கள் உள்ளன. எனக்குத் தெரியாத விஷயங்கள் இருக்கின்றன.
ஆனால் எனக்குத் தெரிந்ததைக் கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவது என் பொறுப்பு. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதில் அனைத்து தரப்பினர்களுக்கும் பொறுப்பு உள்ளது.
இந்த நேரத்தில் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். சவாலை தீர்க்க எனக்கு ஒதுக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவேன். நம் நாட்டிற்கு சர்வதேசத்தின் ஆதரவு தேவை.. உலகில் எத்தகைய பிளவுகள் இருந்தாலும் அந்த ஆதரவை நாம் பெற வேண்டும்.
எமது நாடு உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டிய நாடு அல்ல.. எனவே அதற்கு தேவையான தீர்மானங்களை எடுக்க நான் தயங்கப் போவதில்லை.”
மக்களின் ஆணையை ஏற்று இந்த ஜனநாயக ரீதியிலான அதிகார பரிமாற்றத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் எளிமையான முறையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.