இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணப்படுமா?

0
78

ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணிக்கைக்கு நகர்ந்தாலும் நாளை மறுதினத்திற்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைத்தீவில் வரிசை யுகத்திற்கு பின்னர் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

எப்போதும் பிரதானமாக இரு வேட்பாளார்கள் போட்டியிடும் நிலையில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு முன்னேறும் என ஊகிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இறுதி அறிவிப்பிற்கான சரியான காலவரையறையை தன்னால் வழங்க முடியாத நிலையில் அந்த நடவடிக்கையை உரிய நேரத்தில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேர்தல் விதிகளின்படி, வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதியாக வெற்றிபெற மொத்த வாக்குகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.

எந்தவொரு வேட்பாளரும் இந்த பெரும்பான்மையை அடையவில்லை என்றால் முதல் இரண்டு வேட்பாளர்களைத் தவிர ஏனைய அனைவரும் நீக்கப்படுவார்கள்.

மேலும் நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச்சீட்டிலிருந்து இரண்டாவது விருப்பத்தேர்வுகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு முதல் இரு வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும்.

இரண்டாம் விருப்பு வாக்களிப்பில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும் தேர்தல் அலுவலர்கள் இந்த செயன்முறையை கையாள்வதில் முழுமையாக பயிற்சி பெற்றுள்ளதாக ரத்நாயக்க பொதுமக்களுக்கு உறுதியளித்தார். இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணும் பட்சத்தில் மாவட்டம் ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.