எதிர்வரும் 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் திட்டவட்டமாக கூறினார்.
காஞ்சிபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். நாளையோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களிலொ இந்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ளது. தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் குறித்த முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது.
இதில் பவள விழா பொதுகூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திடீரென நடத்தப்பட்ட இந்த கூட்டம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக தொடர்ந்து
வெளியாகி வரும் தகவல்களே இதற்கு காரணம். அண்மையில் சென்னையில் நடந்த தி.மு.க. பவள விழாவில் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.ப ழனிமாணிக்கம்,
‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து தி.மு.க.வில் மீண்டும் இது பேசுபொருளானது.
பின்னர் சென்னை கோட்டூபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி தனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார்’ என்று கூறினார்.