ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள விசேட பிரிவு: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு

0
75

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் வகையில் இன்று (19) முதல் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.

”இதற்கான திட்டம் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு, அனர்த்த முகாமைத்துவ நிலையம், முப்படையினர், பொலிஸ் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட தேர்தல் கூட்டு அனர்த்த செயற்பாட்டுப் பிரிவின் ஊடாக இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஏதேனும் அனர்த்த சூழ்நிலை காரணமாக தேர்தல் கடமைகள் அல்லது வாக்களிப்பதில் இடையூறுகள் ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 117க்கு அழைக்க முடியும்.

இல்லையெனில் 0113668032, 0113668087 அல்லது 0113668025 ஆகிய சிறப்பு அவசர இலக்கங்களுக்கு அழைக்க முடியும். இந்த விசேட கூட்டு அவசர பிரிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) வரை இயங்கும்.” எனவும் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் மேலும் தெரிவித்தார்.