இலங்கையின் பிரபல யூடியூபர் புருனோ திவாகர 2023ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) எதிராக சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.
ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ததற்காக 50 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி புருனோ திவாகர வழக்கு தொடர்ந்துள்ளார்.
‘SL-Vlogs’ என்ற யூடியூப் சேனலின் உரிமையாளரான புருனோ திவாகர, தனது நிகழ்ச்சியில் பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நடாஷா எதிரிசூரியவின் சர்ச்சைக்குரிய ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சி தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியின் காட்சிகளை தனது யூடியூப் சேனலான ‘SL-Vlogs’ இல் பகிர்ந்ததற்காக திவாகர கைது செய்யப்பட்டார். எவ்வாறாயினும் இருவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து 2024 ஜூன் மாதத்தில் பௌத்தம் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கிலிருந்து திவாகர மற்றும் நடாஷா எதிரிசூரிய ஆகியோர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.