20 இலட்சம் வாக்குகளால் வெற்றி பெறுவேன்: உளவுத்துறையை மேற்கோள்காட்டிய சஜித் சஜித்

0
77

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றிபெறும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். மொனராகலையில் இன்று இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“எனது காலை வாருகின்ற ரணில் – அனுர ஜோடி வாக்கு சதவீதத்தில் கீழ் மட்டத்திலே இருக்கின்றது. புனித தலதா மாளிகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை முதன் முதலில் சமர்ப்பித்து ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்ட பின்னரே நாம் தேர்தல் பணிகளை ஆரம்பித்தோம்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தையும் புத்தபெருமானின் ஆசீர்வாதங்கள் பாதுகாக்கும் என்பதோடு நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

வன்முறை என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையல்ல. எனவே மாற்றுக் கொள்கையோடு இருக்கின்ற எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நாட்டை கட்டி எழுப்புகின்ற பயணத்தில் அனைவரையும் பங்காளர்களாக இணைத்துக் கொள்வோம்.

மத சுதந்திரத்தை கௌரவப்படுத்துவதோடு, பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் ஆகிய மதங்களை பின்பற்றுவதற்கு எவருக்கும் உரிமை இருப்பதனால், அந்த உரிமையை பாதுகாக்கப்படும். மதசார்பற்ற நாட்டை உருவாக்க மாட்டோம்.

அதிகாரத்திற்கு வந்து ஆறு மாதங்களுக்குள் போதைப்பொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு தேவையான அதிகபட்ச தீர்மானங்களை எடுத்து, போதைப் பொருள் மாபியாவை நிறைவுக்கு கொண்டு வருவோம்.

மக்கள் விடுதலை முன்னணியினர், பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் இறுதித் தருணத்தில் உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் தொலைபேசிக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த முறை தேர்தலில் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் நாம் வெற்றி பெறுவோம் என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளது” என்றார்.