இலங்கையின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் தீவிரம்: உற்றுநோக்கும் இந்தியா, சீனா

0
70

இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் பரப்புரைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதுடன் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் அனைத்து பிரச்சாரக் கூட்டங்களும் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனால் பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தமது இறுதி பிரச்சாரக் கூட்டத்தை கொழும்பை மையப்படுத்தி ஏற்பாடு செய்துள்ளனர்.

கொழும்பில் இரண்டு இலட்சம் வரையான மக்கள் இன்றைய பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள பின்புலத்தில், அனைத்து பிரச்சாரக் கூட்டங்களுக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலை இந்தியாவும், சீனாவும் தீவிரமாக உற்று நோக்கியுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை இந்தியாவும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை சீனாவும் விரும்புவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான பல்வேறு நகர்வுகளில் இந்தியா ஈடுபட்டதாகவும் அதிளவான தமிழ்,முஸ்லிம் கட்சிகள் அவருக்கு ஆதரவளிப்பதற்கு இந்தியா மறைமுகமாக பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதன் ஒரு நகர்வாகதான் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசனர் அஜித் தோவல் கடந்த மாதம் அவசரப் பயணமாக இலங்கை வந்திருந்தார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

சீனாவும், இந்தியாவும் தமக்கு சாதகமான ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்களும் தமது கருத்துகளை ஏற்கனவே பகிர்ந்திருந்தனர்.

தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தமக்கு சாதகமான ஜனாதிபதியை உருவாக்கும் முயற்சியில் இந்த இரண்டு நாடுகளும் தொடர்ந்து தீவிர பணியாற்றி வருவதாகவும் பல்வேறு வகையில் அவர்களுக்கான உதவிகளை இந்த நாடுகள் வழங்கி வருவதாகவும் இராஜதந்திர மட்டத்தில் பேசப்படுகிறது.