தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் இப்படித்தான் உள்ளனர்; சாடும் டக்ளஸ் தேவானந்தா

0
58

தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது தான் அவர்களின் பொதுவான இயல்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அம்பாறை – காரைதீவு பகுதியில் இன்று (17) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தெளிவாக இருக்கின்றார்கள். தேர்தல் தொடர்பில் நீண்ட கால அனுபவங்கள் அம்மக்களுக்கு இருக்கின்றது.

சரியான திசை வழி நோக்கி அம்மக்கள் அணி திரள்வார்கள் என நான் நினைக்கின்றேன். ஏனெனில் வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் கொள்கைகள் வேலைத்திட்டங்கள் இருக்கலாம். அந்த கொள்கைகள் வேலைத்திட்டங்களில் சுயலாபங்கள் தான் கலந்து இருக்கின்றது.

இது தவிர தேர்தல் புறக்கணிப்பு பொது வேட்பாளர்கள் விடயத்திலும் எம்மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். அதனை எதிர்வரும் 22 ஆம் திகதி அறிந்து கொள்வோம். இருந்தாலும் எனது ஜனாதிபதி வேட்பாளர் அம்மான் ரணில் விக்ரமசிங்க தான் எனது தெரிவும் விருப்பமும் கூட.

அத்துடன் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது தான் அவர்களின் பொதுவான இயல்பு. எனவே அதனால் தான் மக்கள் தற்போது நிதானமாக செயற்பட்டு வருகின்றார்கள் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.