தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் பொதுச் சபையும்: இருதலைக் கொள்ளி நிலைகளுக்கு அப்பால்!

0
48

டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் என்று சலுகைகளை முன்னிலைப்படுத்தும் அரசியல் வியாதி ஒரு புறமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையைச் சீர்குலைத்து சுமந்திரன் முன்னெடுத்த சந்தர்ப்பவாத அரசியல் நோய் மறுபுறமுமாகக் காணப்பட்ட இருதலைக் கொள்ளி நிலையை விட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்மறையான ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு என்பதற்கும் பொதுச்சபையின் பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டுக்கும் இடையான புதிய இருதலைக் கொள்ளி நிலை உருவாகியுள்ளது.

இது ஒருவகையில் உரிமை சார்ந்த அரசியல் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. சுய நிர்ணய உரிமை பற்றியும் பொது வாக்கெடுப்பு பற்றியும் தேசமாகத் திரள்வது பற்றியும் தமிழர் தாயகத்தில் மக்கள் மட்டச் செயற்பாடுகளைக் காணமுடிகிறது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவின் பின்னர் உரிமைகளை மையப்படுத்தும் நல்ல விதமான இருதலைக் கொள்ளி நிலையை எவ்வாறு ஈழத்தமிழர் சமூகம் எதிர்காலத்தில் கையாளப் போகிறது என்பது முக்கியத்துவம் பெறவேண்டும்.

தமிழர்கள் மத்தியில்–

ஈழத்தமிழர் தேசியத் திரட்சி சலுகைகளை மையப்படுத்தியது அல்ல உரிமைகளையே முன்னிலைப் படுத்துகிறது என்பதை எதிர்மறையாக எடுத்தியம்புவதற்கு மாற்றாக நேரடியாகவே முன்னிலைப் படுத்தலாமே என்ற சிந்தனை தமிழ் மக்கள் மத்தியில் 2024 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மேலோங்கியுள்ளமை தென்படுகிறது.

தேர்தல் முடிவுகளைப் பொறுத்து இதை மேலும் உறுதிப்படுத்தலாம். தமிழ் மக்கள் எந்த வேட்பாளருக்குப் பெரும்பான்மையாக வாக்களிக்கப் போகிறார்கள் என்ற தெரிவுக்கு அப்பால், 2009 இன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் மேற்கொண்டு வந்த சந்தர்ப்பவாத அரசியல் தவறானது என்ற உணர்வு மக்கள் மத்தியில் வலுத்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் நிலை தொடர்பான மக்களின் கவலை ஒரு புறமும் தமிழ் மக்கள் திரட்சியாக செயற்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மற்றொரு புறமுமாக நிலைமை காணப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாக மறைமுகமாக ஈழத்தமிழர் தேசம் எதை வலியுறுத்த முனைகிறதோ அதையும் விடப் பலமாக ஒரு பொது வேட்பாளர் ஊடாகத் தனது கருத்து நிலையை ஒரு தேசமாக அணி திரண்டு வெளிப்படுத்தலாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் பா. அரியநேத்திரனை பொதுவேட்பாளராக வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலுள்ள குடிசார் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் பெருமளவில் அங்கீகரித்துள்ளன.

இந்திய சார்புத்தன்மையைத் தன்னகத்தே கொண்டவராகக் கருதப்படும் சைவப் பேச்சாளர் ஒருவரைத் தவிர்த்து சைவ, கத்தோலிக்க மதத் தலைவர்கள் பலரும் அரியநேத்திரனுக்குத் தமது ஆசிர்வாதத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

வடக்கில் வாழும் இஸ்லாமியத் தமிழ்ச் செயற்பாட்டாளர்களிற் சிலர் கூட வெளிப்படையாக அரியநேத்திரனை முன்மாதிரியாகப் போற்றியுள்ளார்கள்.

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது தென்னிலங்கைப் பெரும்பான்மை கருத்திற்கொள்ளும் பிரதான வேட்பாளர்கள் தமிழர் நலனுக்கு முரணான நிலைப்பாட்டை மேற்கொண்டதால் அத்தேர்தல் தொடர்பில் கூட்டு நிலைப்பாடொன்றை எடுக்கவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கில்லை என்றும், பிரதான வேட்பாளர் எவருக்கேனும் வெளிப்படையாக வாக்களிக்க எடுக்கும் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்) முடிவானது ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதாகவும் சர்வதேச விசாரணையை மறுத்ததாகவும் அர்த்தம் கொள்ளப்படும் என்றும் தமிழ் சிவில் சமூக அமையம் சொல்லியிருந்தது.

2019 இல் ‘பேய்களில் வலுக்குன்றிய பேய்க்கு’ வாக்களிப்பதால் தமிழ் மக்களின் பிரச்சனை தீரும் என நம்புவது முட்டாள்தனமானது என்று சிவில் சமூக அமையம் மீண்டும் வலியுறுத்தியது.

ஆனால், 2024 இல் அதே அமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் பற்றிய குறை நிறைகளுக்கு அப்பால் 13ம் திருத்தத்தை தீர்வொன்றின் அடிப்படையாகக்கூட ஏற்கமுடியாது என வெளிப்படையாக நிராகரிக்கவேண்டும் என்ற தனது கருத்தை முழுமையாகவும் தான் விரும்பிய மொழிப் பிரயோகத்திலும் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளடக்கப்பட முடியாத யதார்த்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டவாறு அரியநேத்திரனுக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளது.

பன்மைத்தேசிய அரசு—–

பன்மைத் தேசிய அரசு (Plurinational State) என்று ஒரு அரசைப் பற்றி மாத்திரமே சிவில் சமூக அமையம் பேசுகிறது. இரு தேசம் ஒரு நாடு என்று சொல்லிவரும் மக்கள் முன்னணியும் ஒரு அரசைப் பற்றியே (சமஸ்டி அரசு) பேசுகிறது. ஒரு நாடு இரு தேசம் என்று பேசும் அதேவேளை மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பல இடங்களில் பன்மைத் தேசிய அரசு என்றும் பேசிவந்துள்ளார்.

ஆனால், சிவில் சமூக அமையம் மேற்கொண்டதைப் போல ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள கஜேந்திரகுமார் தயாரில்லை என்பதை தேர்தல் பரப்புரை நிறுத்தப்படவுள்ள ஓரிரு நாட்களுக்கு முன் அவசர அவசரமாக அவர் நேரடியாக ஒளிக்காட்சி வடிவில் வெளிப்படுத்தியுள்ளதோடு, பொதுவேட்பாளர் என்ற கோட்பாட்டை முழுமையாக நிராகரித்தும் உள்ளார்.

இதன்மூலம், கஜேந்திரகுமாரின் நிலைப்பாடும் சிவில் சமூக அமையத்தின் நிலைப்பாடும் இம்முறை அடிப்படையில் வேறுபட்டுள்ளன. சிவில் சமூக அமையம் மக்கள் நிலையில் இருந்து கருத்தளவில் விலகாது விட்டாலும் நடைமுறையில் விலகியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

பொதுச்சபை முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருக்கும் குறைபாடு போல கஜேந்திரகுமார் முன்வைக்கும் தேர்தல் அரசியலிலும் குறைபாடு உள்ளது.

பதின்மூன்றாம் திருத்தத்தை எதிர்க்கும் முன்னணியின் அரசியல் அதே வீச்சில் ஆறாம் திருத்தத்தை எதிர்க்கவில்லை. அடிப்படையில் இரண்டுமே சுயநிர்ணய உரிமைக்கு எதிரானவை. ஒற்றையாட்சியை வலியுறுத்துபவை. ஒரே அரசியலமைப்புக்குள் காணப்படுபவை.

பௌத்த கோயில்கள் கட்டப்படும் இடங்களில் மட்டும் குறியீட்டு எதிர்ப்பை மக்கள் முன்னணி வெளிப்படுத்தினாலும் அரசியலமைப்பில் உள்ள பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதை பெரும் வீச்சோடு எதிர்க்கவில்லை.

கேட்டால், தங்கள் விஞ்ஞாபனங்களிலும் கொள்கை விளக்கங்களிலும் ஆறாம் சட்டத்திருத்தத்தையும் பௌத்த முன்னுரிமையையும் தாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்று மக்கள் முன்னனியினர் கூறுவார்கள்.

ஆனால், நடைமுறையில் இவர்கள் பதின்மூன்றுக்குத் தூக்கும் சவப் பெட்டியை, அதே அரசியலமைப்பில் உள்ள ஆறாம் சட்டத்திருத்ததுக்கும் பௌத்த முன்னுரிமைக்கும் அதே வீச்சில் தூக்குவதில்லை.

விடுதலைப் புலிகள் இறுதியாக ராஜபக்ச அரசோடு ஐரோப்பாவில் நடத்திய பேச்சு வார்த்தையில் கூட ஆறாம் சட்டத்திருத்தத்தை அகற்றினால் மட்டுமே இலங்கையின் ஆளும் தரப்பை பேச்சுவார்த்தை, ஜனநாயகம் போன்றவற்றில் நம்பிக்கைகொண்ட தரப்பாக ஈழத்தமிழர் கருதலாம் என்ற கருத்தை முன்வைத்திருந்தார்கள்.

விடுதலைப் புலிகள் முன்வைத்த அரசியலைத் தாமே தொடருவதாகக் காட்ட முற்படும் மக்கள் முன்னனியினர் முன்வைக்கும் அரசியல் அதற்கு நேர்மையற்றதாகவே இருக்கிறது.

கிழக்கில் மாத்திரம் வாக்கெடுப்பு?

அதைவிட நகைப்புக்கிடமான விவகாரம் என்னவென்றால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை, பதின்மூன்றை மட்டுமே எதிர்க்கிறோம் என்ற வியப்புக்குரிய நிலைப்பாடு.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் முன்வைத்த தவறான வாழிடக் கோட்பாட்டை மறுதலிப்பதிலும், கிழக்கில் மட்டும் பொதுவாக்கெடுப்பு என்பதை மறுதலிப்பதிலும் காட்டப்படவேண்டிய அக்கறை பதின்மூன்றை விட ஈழத்தமிழர் தாயகம் தேசம் ஆகிய அடிப்படைகளில் முக்கியமானது.

அதுமட்டுமல்ல, பொதுச்சபை இன்று குழப்பமாக முன்வைத்திருக்கும் பன்மைத் தேசிய அரசு என்ற கருத்துக்கூட சிவில் சமூக அமையமும் கஜேந்திரகுமாரும் இணைந்து அறிமுகப்படுத்திய சொல்லாடல் என்பதை ஈழத்தமிழர் அரசியலைக் கூர்மையாக அவதானித்து வருபர்கள் குறிப்பெடுத்துவைத்துள்ளார்கள்.

அதாவது, இரு அரசுகளின் தொகுப்பாக சமஸ்டி வெளிப்படவேண்டும் என்று ஈரரசுத் தீர்வை முன்வைக்க முன்னணியும் தயாரில்லை சிவில் சமூகமும் தயாரில்லை. இதேபோலத் தான் பொதுச்சபையின் தேர்தல் விஞ்ஞாபனமும் இருக்கிறது.

புதிய அரசியலமைப்பை மாத்திரமே பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வலியுறுத்துவதால், பதின்மூன்றாம் திருத்தத்தைப் பற்றி அது பேச வேண்டிய அவசியம் இல்லை என்ற வாதம் கருத்து ரீதியாக ஒருவகையில் சரியானதே.

ஆனால், பொதுச்சபையில் இருப்பவர்களின் முகங்களைப் பார்த்தால் பதின்மூன்றை ஆரம்பமாகக் கொள்ளலாம் என்ற தனிநபர்கள் சார்ந்த நிலைப்பாடு கொண்டவர்கள், கடிதங்கள் எழுதியவர்கள் பெரும்பான்மையாக அங்கு தென்படுவதால், அவர்கள் முன்வைத்திருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு உரியவர்களாக தேர்தலின் பின் அவர்களின் செயற்பாடு இருக்க வாய்ப்பில்லை என்று மக்கள் முன்னணி வைக்கும் தனிநபர்கள் சார்ந்த விமர்சனமும் சரியானதே.

நடைமுறையில் மக்கள் முன்னணியின் புறக்கணிப்பு அரசியல் பெருத்த சவாலை எதிர்நோக்கியுள்ளது. இந்த நகர்வோடு இணைந்து, அதைச் சாமர்த்தியமாகத் தன்வழிப் படுத்தும் மக்கள் மயப்பட்ட தன்மையில் இருந்து மக்கள் முன்னணி தனித்துப்போயுள்ளது.

புலம் பெயர் சூழலில் சிலர் பலியாகியுள்ள இமாலயப் பிரகடனம் என்ற போலித்தனத்தை எதிர்ப்பதில் வட அமெரிக்கா, கனடா ஆகிய முனைகளில் இருந்து தீவிரமாகத் தமது கருத்தை முன்வைக்கும் அமைப்புகள் இன அழிப்புக்கு எதிரான நீதியையும் சுயநிர்ணய உரிமை சார்ந்து பொதுவாக்கெடுப்பைக் கோருகின்ற அமைப்புகளாக உள்ளன. அவையும் அரியநேத்திரனை ஆதரிக்கின்றன.

தேர்தல் விஞ்ஞாபனக் குறைபாடு—–

வட அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக் குழு கனடியத் தமிழர் தேசிய அவை ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

வட அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக் குழு அரியநேத்திரன் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவை திருத்தப்படவேண்டும் என்றும் அதேவேளை அரியநேத்திரனை ஆதரித்து வாக்களிக்குமாறும் கோரியுள்ளது.

கொள்கையளவில் பார்ப்பது ஒரு வகை, தனிநபர்கள் அளவில் பார்ப்பது இன்னொரு வகை. கொள்கையளவில் பொதுச்சபையின் கொள்கையை மேலும் திருத்தியமைக்க இடமுண்டு. தனிபர் அளவில் நம்பிக்கையீனமான அடிப்படை இருந்தால், அதை மக்கள் மயப்படுத்தல் ஊடாக மாற்றியமைக்கலாம்.

அடிப்படையில் மக்களின் நாடித்துடிப்பு தமிழ்த் தேசிய உரிமை சார்ந்து வெளிப்படுகிறது. அதைச் சரியாக ஆற்றுப்படுத்துவதில் மக்கள் முன்னணி தனது வகிபாகத்தை இழந்து வருகிறது. இது ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலுக்கு நல்லதல்ல.