வரிசை யுகத்திற்கு கொண்டு செல்லும் தவறை செய்ய வேண்டாம்: மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

0
101

நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தின் மூன்றாம் ஆண்டில் இன்னும் பல மாற்றங்கள் வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

பதுளையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

இந்தப் பெருங்கூட்டத்தைப் பார்க்கும் பொழுது வெற்றி உறுதியென கூறிய ஜனாதிபதி இந்த வாரம் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தேர்தலை எதிர்கொள்கிறீர்கள் என்றார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு கொண்டு செல்லும் தவறை செய்ய வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக கடந்த இரண்டு வருடங்களில் நாம் முன்னெடுத்த வேலைத் திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஏனைய தலைவர்கள் முடியாது என்று கூறுகையில் நான் ஆட்சியை ஏற்றேன். இந்நாட்டு மக்கள் உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு இன்றி தவிக்கும் போது சஜித்தோ, அநுரவோ கண்டுகொள்ளவில்லை. மருந்து இல்லாமல் மக்கள் இறந்தபோது அவர்கள் வருத்தப்படவில்லை. அவர்கள் தங்கள் அரசியல் இலக்குகளை அடைய மக்களை தியாகம் செய்ய விரும்பினர்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது​​ பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 05 வருடங்கள் ஆகும். ஆனால் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மிக விரைவாக மீட்டோம். நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு காலப்பகுதியில் அதன் வித்தியாசத்தை மக்கள் காணலாம்.

நாங்கள் இன்னும் தொங்கு பாலத்தில் இருக்கிறோம். அனுரவிடமோ சஜித்திடமோ சிறந்த திட்டம் இல்லை. நாட்டைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை இல்லை. வரிகளைக் குறைப்பதாகச் சொன்னாலும் அதற்கான அதிகாரத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறவில்லை. அதனால்தான் மக்கள் முன்பொய் சொல்கிறார்கள்” என்றார்.

மேலும் தப்பித்து ஓடிய தலைவர்களை நம்ப முடியாது என்றும் செப்டெம்பர் 21ஆம் திகதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை தொடருமாறும் ஜனாதிபதி இதன்போது கேட்டுக் கொண்டார்.