நாட்டை அநுரவுக்கு கொடுத்தால் நாளை நாடு இருளில் மூழ்கும் என இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கந்தளாய் ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் அவர் உரையாற்றினார்.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை கலாசாரத்தை ஜே.வி.பி சார்ந்த குழுக்கள் முன்னெடுத்ததாக கூறிய அவர் தற்பொழுது 95 வீதமான பகிடிவதைகளை நிறுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”செப்டம்பர் 22 ஆம் திகதி காலை கிழக்கில் சூரியன் உதிக்கும் போது நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியிருப்பார்.
ஹாவட் பல்கலைக்கழக நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் என்னுடன் பேசினார். ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டம் முன்மாதிரியானது. ஆபிரிக்காவில் வீழ்ச்சியடைந்துள்ள நாடுகளை மீட்க அவரை அனுப்ப முடியுமா என்று கேட்டார். பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இன்று என்ன நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டை எரித்த திசாநாயக்க போன்றவர்கள் அன்றி ரணில் போன்ற விக்ரமசிங்கவினர் தான் தேவை. முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களுக்குச் சென்றேன். மூடியிருந்த கடைகளை திறக்கவும் ஓரமாக வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் அடிக்கவும் கல்வி கற்பதற்கு மின்சாரம் பெற்றுத் தரவும் ஜனாதிபதியின் நடவடிக்கைக்காக வாக்களிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
நாடு எதிர்பார்ப்பின்றி இருந்தபோது எனது வீடு தீவைக்கப்பட்டும் அச்சமின்றி முன்வந்து நாட்டைக் காத்த தலைவரை ஜனாதிபதியாக்க மக்கள் தயாராக உள்ளனர். அரச பல்கலைக்கழகமொன்றினால் சுயாதீனமாக மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் ஜனாதிபதி 54 வீத வாக்குகளினால் வெற்றியீட்டுவார் என்ற முடிவு வெளியாகியுள்ளது.
ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தாலும் கடந்த 03 வாரத்தில் அந்த நிலைமை மாறியது. ஜனாதிபதி உண்மையை மட்டுமே பேசுகிறார். அதனைக் கேட்டு மக்கள் அவருடன் கைகோர்த்துள்ளனர். ஜனாஸா விவகாரத்தில் அரசாங்கம் என்ற வகையில் முஸ்லிங்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார். அந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தது” என்றார்.