மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதே தனது முதல் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஹொரணை பொது விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் அவர் இதனைக் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துள்ள ஒப்பந்தங்களை பாதுகாப்பது அத்தியாவசியமானது எனவும் சஜித் மற்றும் அநுர கூறுவது போன்று அந்த உடன்படிக்கைகளை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும் சஜித் மற்றும் அநுரவின் ஆலோசனைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் இல்லையெனவும், அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்திற்கே ஆதரவு உள்ளது என்றும் தெரிவித்த ஜனாதிபதி “IMF வேலைத்திட்டத்தில் இலங்கை அடைந்துள்ள சாதனைகளைப் பாதுகாத்து முன்னேறுவது முக்கியம்” என அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கொசெக் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க வேண்டும் என்பதே எனது முதல் நோக்கம். சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் எனவும் கூறினார்.
சர்வதேச நாணய நிதியம் இல்லாமல் எங்களுக்கு உதவ வேறு யாரும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் காரணமாக எங்களுக்கு 18 நாடுகளின் ஆதரவு கிடைத்தது. மேலும் நாம் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டியை செலுத்துவதில் 10 பில்லியன் டொலர்கள் நன்மையைப் பெறுகிறோம்” என்றார்.