ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எப்போது திறக்கப்படும்?: குற்றச்சாட்டை மறுத்த ஜே.வி.பி

0
93

தேசிய மக்கள் சக்தி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கும் மாணவர்கள் குழுவிற்கும் கலைப் பீடத்தில் கல்வி கற்கும் முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து மாணவர்களையும் கடந்த வியாழக்கிழமை (12) மாலை 06 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

நிலைமை மோசமடைவதைத் தவிர்ப்பதற்காக பல்கலைக்கழகத்தை மூட நிர்வாகம் தீர்மானித்ததாகவும் தேர்தலுக்காக அடுத்த வாரம் மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறை வியாழக்கிழமை (12) முதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதலுக்கு தேசிய மக்கள் சக்தியுடன் நெருங்கிய ஒருவரே பொறுப்பு என கூறப்படும் ஊடகச் செய்திகளை தேசிய மக்கள் சக்தி மறுத்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, பல்வேறு தரப்பினரும் தமது கட்சி மீது பழியை சுமத்த முயற்சிப்பதாக கூறினார். ஆனால் அதற்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.