இலங்கையில் 1983 தமிழர்களுக்கு எதிரான கலவரம் வெடித்த நாள். கொழும்பில் தொடங்கி பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. பல நாடுகளுக்கு உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஈழத்தமிழர்கள் பிறந்த நாட்டைவிட்டு வெளியேற அடித்தளமிட்ட சம்பவம்.
ஈழத் தமிழ் மக்கள் வரலாற்றில் மறக்கமுடியாத காலங்கள் அவை. நம் அடுத்த சந்ததிகளுக்கு கடத்தப்படவேண்டிய வரலாற்று நிகழ்வு. சொந்த நாட்டில் வாழ வழியின்றி நாட்டைவிட்டு தமிழர்கள் அகதிகளாக துரத்தப்பட்ட வலி மிகுந்த காலம்.
1983 சூலை 23 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னணியே இப்படுகொலைகளுக்குத் தூண்டுதலாக இருந்தது எனக் கூறப்படாலும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சிறில் மத்தியூ மற்றும் கட்சி உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு விரைவில் சிங்களப் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழருக்கு எதிரான வன்முறைகளாக மாறியது.
1983 சூலை 24 இரவு, தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. ஏழு நாட்களில், முக்கியமாக சிங்களக் கும்பல் தமிழரைத் தாக்கினர், உயிருடன் எரித்தனர், படுகொலைகளைப் புரிந்தனர், உடமைகளைக் கொள்ளையடித்தன. இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது, 150,000 பேர் வீடற்றவர்களாயினர். ஏறத்தாழ 8,000 வீடுகளும், 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு $300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரச-சார்பற்ற அமைப்பு 1983 திசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் இப்படுகொலைகளை ஒரு இனப்படுகொலை என்று விவரித்தது.
இவ்வினப்படுகொலைகளின் விளைவாக இலங்கைத் தமிழர்கள் பலர் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். மேலும் ஏராளமான தமிழ் இளைஞர்கள் போராளிக் குழுக்களில் சேர்ந்தனர். கறுப்பு யூலை என்பது பொதுவாக தமிழ் போராளிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூலை மாதம் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் ஈழத்தமிழரின் நினைவு மாதம் ஆனது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் 1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் (Jaffna) – திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் கண்ணி வெடித்தாக்குதலை மேற்கொண்டனர்.