ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் இலங்கையின் வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதை சர்வதேச நாணய நிதியம் (IMF) உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மீதான இலங்கையின் மூன்றாவது மீளாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் ஜூலி கோசாக் தௌிவுப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் மீளாய்வு நேரம் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும் என்றும் அவர் கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IMF இன் நிலைப்பாட்டில் இருந்து, நாம் பார்ப்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியே ஆகும். ஆனால் நாடு அதன் மோசமான நெருக்கடிகளிலிருந்து முழுமையாக வெளிவருவதற்கு இந்த வளர்ச்சியை பாதுகாப்பது மிகவும் முக்கியம் என கோசாக் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தேர்தலுக்குப் பின்னர் மீளாய்வு குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும். எனவே ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெற்று புதிய அரசாங்கம் அல்லது மக்களின் தேர்வு அடிப்படையிலான முடிவுகளுக்குப் பின்னர் நாங்கள் வேலைத்திட்ட கலந்துரையாடல்களை முன்னெடுப்போம்.
தேர்தலுக்குப் பிறகு கடன் நிலைத்தன்மை மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்வது குறித்து இலங்கையின் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கவலைகளுக்கு பதிலளித்த கோசாக், சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றார்.
“நாட்டின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் கடன் நிலைத்தன்மை மதிப்பீடு மிகவும் முக்கியமானது. இவ்வாறான விடயங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு கடன் நிலைத்தன்மையின் மொத்த மதிப்பீட்டை மேற்கொள்வதில் மாத்திரமே உள்ளது.
சர்வதேச நாணய நிதியம் தனது மதிப்பீடுகளை இலங்கை அதிகாரிகள் மற்றும் நாட்டின் பத்திரதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிதி ஆலோசகர்களுக்கு வழங்குகிறது.
முன்னதாக ஒகஸ்ட் மாதம், IMF குழுவொன்று இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முயற்சிகளை மதிப்பிடுவதற்காக கொழும்புக்கு விஜயம் செய்ததுடன், சீனா EXIM வங்கி உட்பட உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தங்களை இறுதி செய்தது.
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான பயணத்தில் இவை முக்கியமான மைல்கற்கள்” என கோசாக் சுட்டிக்காட்டினார்.