36 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த உடல் கட்டழகு வீரர்: தினமும் 16,500 கலோரிகள் என 7 முறை உணவு

0
53

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த இலியா யெஃஃபிம்சிக் எனும் 36 வயதான உடல் கட்டழகு வீரர் (Bodybuilder) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த 6ஆம் திகதி வீட்டிலிருந்தபோது இலியாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரது மனைவி அம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்க ஹெலிகொப்டர் அம்புலன்ஸ் மூலம் இலியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கோமா நிலைக்குச் சென்ற இலியா நேற்று முன்தினம் புதன்கிழமை உயிரிழந்தார்.

இதுதொடர்பில் இலியாவின் மனைவி அன்னா கூறுகையில்,

“இலியாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் அம்புலன்ஸ் வரும்வரையில் அவரது மார்பில் கை வைத்து நன்றாக அழுத்தி முதலுதவி செய்தேன். அவர் உடல் நலம் சீராக வேண்டும் என பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன்.

இரண்டு நாட்களுக்கு அவருடைய இதயம் மீண்டும் துடித்தது. இருப்பினும் அவரது மூளை செயலிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

இலியா தினமும் 16,500 கலோரிகள் என ஏழு முறை சாப்பிடுவதாகவும் 2.5 கிலோ இறைச்சி மற்றும் 108 சுஷி (ஜப்பான் உணவு) உணவில் சேர்த்துக் கொள்வதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

6.1 அடி உயரம் கொண்ட இவர் 154 கிலோ எடை கொண்டவர். இவரது மார்பின் அளவு 61 இன்ச் ஆகும். இவர் பாடசாலையில் கற்கும் காலத்தில் 70 கிலோ எடையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

அர்னால்ட், சில்வெஸ்டர் ஸ்டாலோன் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு உடல் கட்டழகு வீரர் ஆகவேண்டும் என கடுமையாக உழைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.