”என் ஒப்புதல் இல்லாமல் வெளியான அறிக்கை”: ஜெயம் ரவி மீது ஆர்த்தி குற்றச்சாட்டு

0
47

சமீப காலமாக சினிமாப் பிரபலங்கள் அவர்களது திருமண பந்தத்திலிருந்து விலகுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. அந்த வரிசையில் தற்போது ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியினரும் இணைந்து கொண்டனர்.

ஜெயம் ரவி கடந்த திங்கட்கிழமை அவரது திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பில் ஜெயம்ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

‘அண்மையில் சமூக வலைத்தளங்களில் எங்கள் திருமண உறவு குறித்து அறிக்கையொன்று வெளியாகியிருந்தது. இதைப் பார்த்து மிகவும் மன வேதனை அடைந்தேன். இது முழுக்க முழுக்க எனது ஒப்புதல் இல்லாமல் வெளியானது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் நான் வாழ்ந்த 18 வருட திருமண வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதன் கௌரவம் மற்றும் கண்ணியத்தை இழந்துவிட்டதாக நான் உணர்கிறேன்.

என் கணவருடன் பேசுவதற்காக நான் பல முயற்சிகள் செய்தேன். ஆனாலும் அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. எனது குழந்தைகளும் நானும் எதுவும் புரியாமல் தவித்து வருகிறோம். இது முழுக்க முழுக்க அவராகவே எடுத்த முடிவே தவிர, குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது அல்ல.

பொதுவெளியில் இதுகுறித்து கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. ஆனால் என் நடத்தையை களங்கப்படுத்தும் விதத்தில் பொதுவெளியில் நடத்தப்படும் மறைமுக தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு தாயாக எனது குழந்தையின் எதிர்காலம் எனக்கு முக்கியம். இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

மறுக்கப்படாத பொய்கள் எதிர்காலத்தில் உண்மை என நம்பப்படும் அதனால் இவற்றை மறுப்பது என் முதல் கடமை. இக்கடினமான சூழ்நிலையில் எனது குழந்தைகளுக்கு மனோதிடத்தை வழங்குவதே எனது முதல் கடமையாகிறது.

காலம் அனைத்தையும் உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இக்கடினமான சூழ்நிலையை நானும் எனது குழந்தைகளும் கடக்கும் வரையில் எங்கள் தனிப்பிட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வளவு காலமும் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எங்களை காத்து நிற்கும்.

இந்தச் சோதனைக் காலத்திலிருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.