ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வந்தவர் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அந்த சவாலை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதால், நாட்டின் மீது அக்கறையுள்ள அனைவரும் ஒன்றிணைந்து அவரை வெற்றிபெறச் செய்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (10) பத்தரமுல்ல, தலவத்துகொடவில் உள்ள பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 104 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதால் நாங்கள் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியை உருவாக்கினோம்.
இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் என நம்புகிறோம். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் மீது அக்கறையுள்ள அனைவரும் ஒன்று கூடி ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.
கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதியினால் இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முடிந்தது. பொதுஜன பெரமுனவினர் அனைவரும் வழங்கிய ஆதரவினால் குறிப்பாக பங்களாதேஷ் போன்ற நிலைமைக்கு செல்லாமல் நாட்டை காப்பாற்ற முடிந்தது.
எதிர்காலத்தில் கட்சி அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். எனவே, எங்களின் அரசியல் மேடை அனைத்து தரப்பினருக்கும் திறந்திருக்கும். அனைத்து மதத்தினரும் வரவேற்கப்படுகிறார்கள். இனம், மதம் வேறுபாடுகள் இல்லாத ஒரே கட்சியாக நாம் உள்ளோம்.
ஜே.வி.பி எப்படி இவ்வளவு பணத்தை தேர்தலுக்கு செலவிடுகிறது என்பது சந்தேகமே. மேலே அணியும் ஆடைகள் ஒழுங்காக இருப்பதாகவும் ஆனால் உள்ளே அணியும் ஆடையில் ஓட்டை இருப்பதாகவும் ஊடகங்களுக்கு வந்து சொல்லுகிறார்கள்?.
அப்படிச் சொல்பவர்கள் தேர்தலுக்கு இவ்வளவு பணத்தைச் செலவிடுகிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள் உள்ளாடைகளை வாங்க வேண்டும். சஜித் பிரேமதாச பற்றி பேச ஒன்றுமில்லை.” என்றார்.