இலங்கை தோட்ட தொழிலாளாகளின் வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப் போராட்டம் இறப்பர் தோட்டத் தொழிலாளாகள் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்ட குணங்கொண்ட தொழிற்சங்க தலைவரான எம்.ஜி. மெண்டிஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய லயனல் சரத் இவ்வாறு தெரிவிக்கின்றார்.
‘எம்.ஜி. கிரன்திடியில் வசிப்பதற்கு ஆரம்பித்து ஜந்து மாதங்கள் கடந்த நிலையில் அங்கு வெள்ளைக்காரர்களின் தோட்டத்தில் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை வழிநடத்தியதும் ஏற்பாடு செய்ததும் எம்.ஜி. 1938 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலை நிறுத்தப் போராட்டம் சில நாட்களிலே வெற்றியுடன் நிறைவு பெற்றதுடன் இலங்கை வரலாற்றின் தோட்டத் தொழிலாளர்களது முதலாவது ‘;ஸட்ரைக்” என சமசமாஜ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
சகோதரர் எம்.ஜியின் அனுசரனையில் அண்ணாசிகல தோட்ட தொழிலாளர்களினால் இலங்கை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது வேலைநிறுத்தப் போராட்டம். பஸ்பாகை கோரளையைச் சேர்ந்த அனைத்து தோட்ட தொழிலாளர்களுக்கும் இவர்களின் ஒன்றினைந்த வெற்றி சிறந்த எடுத்துக்காட்டாகும்.
முன்னொரு காலத்தில் இறப்பர் தோட்ட தொழிலாளர்களின் வெற்றி பூமியாக வரலாற்றுத் தடத்தை கொண்டுள்ள களுத்துறை மாவட்டத்தின் இன்றைய நிலைமை முற்றிலும் வேறுபட்டு காணப்படுகின்றது.
‘அன்று எமது மக்கள் தமிழ் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு தோட்ட லயன் அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இன்றும் எமது வாழ்க்கையின் நிலைமை அவ்வாறே காணப்படுகின்றது” என களுத்துறை மாவட்ட பதுரெளிய அஸ்க்வெலிய தோட்ட அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் எஸ். பத்மநாதன் தெரிவிக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், அன்று காணப்பட்ட நிலைமையை விட இன்று அவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
‘அன்றைய நாளில் ஒரு மரணம் சம்பவித்தால் சவப் பெட்டிக்கான செலவை தோட்ட நிர்வாகம் வழங்கியது. மயானத்தை அமைத்துக் கொள்வதற்கு சீமெந்து தந்தனர். லயன்களில் வாழ்ந்த மக்களின் துணிகளை துவைப்பதற்கு அதனை எடுத்துச் செல்ல வாரத்தில் ஒரு நாள் டோபி வருவார். முடி வெட்டுவதற்கு பாபர் வருவார். அவர்களுக்கான சம்பளத்தை தோட்டம் வழங்கியது. கோயில் திருவிழாக்களின் செலவை தோட்ட நிர்வாகம் ஏற்றும் கொள்ளும். சம்பளத்தில் அறவிட்டுக்கொள்ளும் வகையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இன்று எவ்வித சலுகைகளும் இல்லை.” பத்மநாதனின் கூற்றுப்படி மானியங்கள் ரத்துச்செய்யப்பட்டமை அனைத்து தோட்டங்களுக்கும் பொதுவானது. அதிகரித்துச் செல்கின்ற வாழ்க்கைச் செலவுக்கேற்ப வழங்கப்படுகின்ற 900 ரூபா இத்தொழிலாளர்களுக்கு எவ்விதத்திலும் போதுமானதல்ல. தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ஆயிரம் ரூபா நாட் சம்பளம் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.
தமது குழந்தைகளுக்கு போசனைமிக்க ஒரு வேலை சாப்பாடு, அவர்களது கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் கிடைக்கின்ற சம்பளம் போதுமானதல்லவென, புற்று நோய் காரணமாக இருபத்தி நாண்கு வருட பால் வெட்டுத்தொழிலுக்கு விடைகொடுத்துள்ள செல்வி கூறுகின்றார்.
‘இப்பொழுது கணவர் மட்டும் தான் வேலைக்குப் போகிறார். ஆனாலும் தோட்டத்தில் தினந்தோறும் வேலை கிடைப்பதில்லை. மழை பெய்கின்ற நாட்களில் எதுவும் இல்லை.” சிந்தாமணி, மாவத்தகமை மொறத்தன்னை தோட்டத்தில் முப்பந்தைந்து வருடங்களாக மிகவும் சுறுசுறுப்புடன் ஒவ்வொரு றப்பர் மரத்தடியிலும் பால் சேகரிக்கும் தேகாரோக்கியமிக்க பெண்ணொருவராவார்.
இன்றைக்கு இருப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் புவியியல் ரீதியில் குருணாகல் மாவட்டத்தில் தேயிலை பயிர் நிலமாய் காணப்பட்ட மொறத்தன்னை தோட்டம் இன்று பின்தங்கிய தோட்டமாகக் காணப்படுகின்றது. ஏனைய றப்பர் தோட்டங்களைப் போன்று மொறத்தன்னை தோட்டத்திலும் றப்பர் பால் சேகரிப்பதிலும் பால் வெடடுவதிலும் பெண்களே முன்னணி வகிக்கின்றனர்.
‘அதிகாலையில் 300 இறப்பர் மரங்களில் பால்வெட்டுதல் வேண்டும்;. ஒரு மணித்தியாலத்தின் பின்னர் பால் சேகரித்தல் வேண்டும். பால் வாளிகளை தூக்கிக்கொண்டு, மேடு பள்ளம் என ஒவ்வவொரு மரத்தடிக்கும் செல்லல் வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எமதுதொழிலாளர்கள் விழுந்து காயத்திற்குள்ளாகுவார்கள்”.
அதுமட்டுமல்ல, அட்டை மற்றும் பாம்பு கடி போன்றவற்றுக்கும் பஞ்சமில்லை. அப்படியிருந்தும் எமக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபா 900 மட்டுமே வழங்கப்படுகிறது. அது எமது அன்றாட வாழ்ககைக்கே போதுமானதல்ல.
அதிகாலை ஆறு மணியளவில் ஆரம்பமாகின்ற அவர்களது அன்றாட பணிகள் மாலை நாண்கு மணிக்கு நிறைவுறுவதாக இருந்தாலும் இறப்பர் பால் சேகரிக்க வருகின்ற பவுசர் தாமதமானால், அவர்கள் மேலும் சில மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டும்.
“அரிசி, சீனி, மாவு போன்ற அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. ஆனால் எமது தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. அரசாங்கம் தலையிட்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைப் பெற்றுத்தர வேண்டும்.” வாழ்க்கைச் செலவுக்கேற்ற சம்பளத்தை பெற்றுத்தர வேண்டுமென மூன்று குழந்தைகளின் தாயான சிந்தாமணி வலியுறுத்துகின்றார்.
தாய் தந்தை என இருவரும் றப்பர் தோட்டத்தில் பணிபுரிந்தாலும் கிடைக்கின்ற வருமானம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கும் கூட போதுமானதல்ல. ஆகையால் பலர் தோட்டத்திற்கு வெளியில் கூலி வேலிகளைத் தேடிச் செல்கின்றனர். மொறத்தன்னை தோட்டத்தில் பாடசாலை செல்கின்ற வயதிலுள்ள மூன்று குழந்தைகளின் தந்தையான ரஞ்சனி குமாரும் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
‘2004 ஆம் ஆண்டு முதல் நான் தோட்டத்தில் வேலை செய்கின்றேன். 30 நாட்கள் வேலை செய்தாலும் ஈ.பி.எப், ஈ.டி.எப் மற்றும் யூனியனுக்கான சந்தா அறவிடப்பட்டு இறுதியில் எஞ்சும் சம்பளம் இறுபத்தி நாண்காயிரம் மட்டுமே. அத்தொகை குழந்தைகளின் தேவைகளுக்கே போதுமானதல்ல. ஒரு பிள்ளை உயர்தரத்திலும் மற்றைய பிள்ளை சாதாரண தரத்திலும் கல்வி கற்று வருகின்றனர். மகள் ஆறாம் ஆண்டில் கல்வி கற்கின்றார். கணவர் மேசன் வேலைத் தேடிச் செல்கிறார்.”
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு
றப்பர் உற்பத்தித் தொழிலில் அதிகளவு இரசாயனம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக அமோனியா பயன்பாடு றப்பர் தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது. தோல் பாதிப்புக்கள், கண், மூக்கு, தொண்டை மற்றும் பார்வையில் பாதிப்பு ஏற்படுதல், கைவிரல் காயங்கள் போன்ற ஆபத்துக்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறான பாதிப்புகளுக்கு மேலதிகமாக பாம்பு மற்றும் பூச்சுக் கடிகளுக்கு உள்ளாகின்ற ஆபத்து றப்பர் தோட்டத் தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரதான பிரச்சினையாகும்.
அதேபோன்று இறப்பர் உற்பத்தியின் போது இரசாயன பயன்பாட்டு ஆபத்துக்களைப் போன்று மின்னொழுக்கின் காரணமாகவும் ஆபத்துக்கள் ஏற்படுகின்ற சாத்தியம் அதிகமானதாகும்.
இவ்வாறு 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மின்னொழுக்கின் காரணமாக காலி போகொட றப்பர் உற்பத்தி தொழிற்சாலையொன்று முழுமையாக எரிந்து நாசமாகியது. இரசாயன கழிவுகள் நீரில் கலப்பதால் புளத்சிங்ஹல பிரதேசத்தில் றப்பர் தொழிற்சாலையொன்று அவ் ஆண்டில் மூடப்பட்டது.
உலக சுகாதார நிறுவனத்தைப் போன்று உலக தொழிலாளர் அமைப்பின் சிபாரிசுகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கமைவாகவே இயங்குவதாக இந்நாட்டில் இறப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பிரதான பெருந்தோட்ட நிறுவனங்கள் தமது இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தாலும் அவை எவையும் தொழிற்தளங்களில் பின்பற்றப்படுவதில்லை.
கைக்கவசங்கள், பாதணிகள், தலைக்கவசம் மற்றும் பாதுகப்பு அங்கிகள் தமக்கு கிடைப்பதில்லையென குருணாகல், களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி போன்ற அனைத்து பிரதேச தோட்ட தொழிலாளர்களும் தெரிவிக்கின்றனர்.
தொழிற்தளத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்கள் பற்றி அவர்களுக்கு எவ்வித விழிப்புணர்வும் இல்லை. அவர்களுக்கு இவ்விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டுவதில் தொழிற்சங்கங்களும் உதாசீனப் போக்கையே கடைப்பிடிக்கின்றன.
தோட்ட மருத்துவ நிலையங்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியது. பல தோட்ட நிறுவனங்கள் அவ்வியடம் தொடர்பில் அவதானம் செலுத்துவதேயில்லை.
‘தோட்ட மருத்துவ நிலையங்களுக்கு மருத்துவர்கள் இல்லை. உதவியாளர்களும் இல்லை. மருந்துகள் இல்லை மற்றும் ஏனைய உபகரணங்களும் இல்லை. பல மருத்துவ நியைங்கள் மூடப்பட்டுள்ளன.
விசேடமாக முதியோர் மற்றும் குழந்தைகளின் சுகாதரம் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை” என இரத்தினபுரி மாவட்ட பாடசாலையொன்றின் ஆசிரியரொருவரான எம்.சந்திரகுமார் தெரிவிக்கின்றார். அவர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மாவட்ட அமைப்பாளராவார்.