தமிழ் மக்கள் தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ள வேண்டாம்: தமிழ் பொது வேட்பாளர் கோரிக்கை

0
33

தென்பகுதி வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு தமிழ் மக்கள் தமது தலையில் மண் அள்ளிப்போடும் செயல் என தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (08) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்து வெளியிடுகையில்,

“தென் பகுதி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் அளிக்கின்ற வாக்கானது தமிழ் மக்கள் தமது தலையில் மண்ணை தாமே அள்ளி கொட்டுவதற்கு சமமாகவே இருக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

சஜித் பிரேமதாச ஆயிரம் விகாரைகளை கட்டுவதாக தெரிவித்து இருக்கின்றார்.எதோ ஒரு கட்சி கூறுகின்றது என்பதற்காக நீங்கள் அவருக்கு அளிக்கின்ற வாக்கானது விகாரைகளுக்கு வைக்கின்ற ஒவ்வொரு கல்லாக தான் இருக்கும்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்கானது இருக்கின்ற நிலங்களை இன்னும் இழந்து செல்வதாகவே அமையும். ரணில் விக்கிரமசிங்கவே ஒரு கட்டமைப்பாக ஒரு தேசமாக ஒரு இனத்தின் விடுதலைக்காக இருந்த எம்மை சிதைத்த பெருமை அவரைத் தான் சாரும்.

அதேபோல் அனுரகுமார திசாநாயக்க எமது இணைந்த வடக்கு கிழக்கை பிரித்தவராக இருக்கின்றார். இவ்வாறானவர்களை தென்பகுதியில் இருந்து அழைத்து வந்து மாலை போட்டு பொன்னாடை போர்த்தி வரவேற்கின்ற ஒரு வெட்கம் கெட்ட சமூகமாக நாம் மாறி வருகின்றோம்.

ஆகவே, இந்த பொதுக் கட்டமைப்பு ஊடாக ஒரு செய்தியை சொல்வதற்காகவே நான் வந்திருக்கின்றேனே தவிர, ஒரு ஜனாதிபதியாக வருவதற்கு அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அந்த கதிரையை தட்டி பறிப்பதற்காகவும் இல்லை.

எமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் தென் இலங்கைக்கும் ஒன்பதாவது ஜனாதிபதியாக வர இருக்கின்றவருக்கும் தெரிவிக்கவே போட்டியிடுகிறேன்.

வடக்குக் கிழக்கில் ஒரு இனமாக ஒரு தேசமாக ஒன்றிணைந்த கட்டமைப்புக்குள் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை பெறுவதற்காக இந்த சந்தர்ப்பத்ததை பயன்படுத்த வேண்டும்.“என்றார்.