உயர் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் பணி நிறுத்தம் தொடரும்: மருத்துவர்கள் அதிரடி அறிவிப்பு

0
100

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கோரியும், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவர்கள் பணி நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி நிறுத்தத்தினால் இதுவரை 23 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லையெனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதுமட்டுமன்றி அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தங்கள் போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநில சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார கல்வி இயக்குநர் பதவி விலகக் கோரி பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் இன்று மதியம் சுகாதாரத் துறையின் தலைமையகம் ‘ஸ்வஸ்த்ய பவன்’னுக்கு பேரணியாக செல்லவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஒருவர் கூறுகையில் “நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. உயிரிழந்தவருக்கு நீதி கிடைக்கவில்லை. எங்கள் போராட்டமும் பணி நிறுத்தமும் தொடரும். சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார கல்வி இயக்குநர் இருவரும் பதவி விலக வேண்டும்” எனக் கூறியுள்ளார்.