யாழ். மக்களை மிரட்டிய அனுரவிற்கு சுமந்திரன் ஆதரவு: தம்பிராசா விசனம்

0
51

ஜனாதிபதி தேர்தலில் யாழ் மக்கள் தனக்கு கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று அநுர மிரட்டியுள்ளார் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா (M.Thampirasa) தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழினத்தின் ஒற்றுமையை சர்வதேசத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்யப் போகின்றார்கள் எனவும் அந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் எனக்கு கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற தொனியில் யாழ் மக்களை அநுர (Anura) மிரட்டியுள்ளார்.

ஏற்கனவே பல துரோகங்களைச் செய்த ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), தமிழ் மக்களிடம் மிரட்டியதற்காக அநுர மன்னிப்பு கோர வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளார். 

இந்த நிலையில் தமிழரசுக் கட்சியால் (ITAK) வளர்த்தெடுக்கப்பட்ட துரோகி சுமந்திரன் அநுரவிற்காக நல்ல விதமாக பேச முனைகின்றார். சுமந்திரன் (M. A. Sumanthiran) தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரா அல்லது தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரா என தெரியவில்லை.

அதுவரைக்கும் அமைதியாக இருந்த அநுர இந்த விடயம் குறித்து நண்பர் சுமந்திரன் விளக்கமளித்துள்ளார் என தெரிவித்துள்ளார். ஜேவிபி என்ற இனவாதக் கட்சி தமிழ் மக்களை கொல்வதற்காக பல்லாயிரக்கணக்கான ஆட்களை திரட்டி இராணுவத்திற்கு வழங்கிய ஒரு கட்சி. இன்று தன்னை மாற்றி நிறப்பூச்சு பூசி தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் வந்து மீண்டும் ஆயுதத்துடன் மிரட்டுவதைப் போல் மக்களை மிரட்டி வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றார்கள்.

அனைத்து தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் தலைமைகளை மிரட்டி தங்களுக்கு வாக்களிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழ் மக்களாகிய நாங்கள் எல்லா பேதங்களையும் தாண்டி ஒற்றுமையாக சங்கு சின்னத்திற்கு வாக்களித்து 1960களில் எப்படி வாழ்ந்தோமோ அவ்வாறான சூழ்நிலையை தோற்றுவித்து சர்வதேசத்திற்கு எங்களுடைய ஒற்றுமையை உறுதியை எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையை தெரிவிப்பதற்காக இதனை ஒரு சந்தர்ப்பமாக உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் மாவை சேனதிராஜாவின் நிலைப்பாடு என்ன என்பது புரியவில்லை. நாங்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிப்போம் என முதல் தெரிவித்தார்.

பின்னர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிப்பதாக கட்சி முடிவெடுத்தது தனக்கு தெரியாது என்று சொன்னார். பின்னர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பதாக இரகசிய தகவல்களை வெளியிட்டனர். பின்னர் ரணில் வீட்டிற்கு வந்தவுடன் அவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என வாழ்த்தி அனுப்பினார்.“ என தெரிவித்துள்ளார்.