முன்னணி ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன் 16 வெளியீட்டு நிகழ்வை இன்று (09) இரவு நடத்துகிறது. இலங்கை நேரப்படி இந்த வெளியீட்டு நிகழ்வு இரவு 10.30 மணிக்கு தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட நிகழ்வுக்கு ஆப்பிள் “Glowtime” என பெயரிட்டுள்ளது. ஆப்பிள், ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ப்ரோவை புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 உடன் இன்றிரவு அறிமுகப்படுத்தும் என்பது உறுதியாகத் தெரிந்துள்ளது.
வழக்கம்போல ஐபோன் 16 சீரிஸ் ஐபோன் 16, 16 பிளஸ், 16 ப்ரோ மற்றும் 16 ப்ரோ மெக்ஸ் என நான்கு மொடல்களுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலையான ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் ஆகியவை வழக்கமான 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் திரைகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புது பேஸிக் மெடல்களுக்கு, புதிய செங்குத்து கேமரா அமைப்பை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வடிவமைப்பு, ஸ்டாண்டர்ட் மாடல்களில் ஸ்பேஷியல் வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும் ஆப்பிளின் திட்டத்துடன் ஒத்துப்போவதாகக் கூறப்படுகிறது. இந்த அம்சம் முன்பு ப்ரோ மாடல்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருந்தது.
ஐபோன் 16 சீரிஸின் மிக முக்கியமான மேம்படுத்தல்களில் ஒன்று ஐபோன் 15 இல் உள்ள A16 சிப்பில் இருந்து A18 சிப்பிற்கு மாறுவதாகும். A18 சிப் செயல்திறன் மற்றும் ஆற்றல் திறன் மேம்பாடுகளை வழங்குகிறது. இந்த மேம்பட்ட சிப் ஆனது சாதனத்தில் AI செயலாக்கத்தை ஆற்றும், இது Apple Intelligence போன்ற அம்சங்களை செயல்படுத்தும்.
A18 சிப் ஐபோன் 16 சீரிஸின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்கவும், கேமிங், மல்டிடாஸ்க் மற்றும் அன்றாட பயன்பாட்டை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 மாடல்களில் 8 ஜிபி ரேம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.