எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக வீடு வீடாக தேர்தல் பிரச்சாரம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணைக் குழு (EC) வெளியிட்டுள்ளது.
இதன்படி வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு அதிகபட்சமாக ஐந்து நபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“இந்த வரம்பை மீறும் சந்தர்ப்பங்களில் உடனடியாக சட்டத்தை அமல்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சில அரசியல் கட்சிகள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தின் போது துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க ஐந்துக்கும் மேற்பட்டவர்களை அனுப்புவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இவ்வாறான செயற்பாடுகளே முதன்மையான காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.