“மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி தேசிய மக்கள் சக்தி நாட்டை ஏமாற்றிய போதிலும், அவர்களின் 232 பக்க விஞ்ஞாபனத்தில் மாற்றம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அது வெற்று மாற்றம். ஒட்டுமொத்தத்தில் அநுரவின் தேர்தல் விஞ்ஞாபம் மக்களை முட்டாளாக்குகின்றது.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
டி.எஸ். சேனநாயக்கவும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் இணைந்து நாட்டின் சுதந்திரத்துக்காக ஸ்தாபித்த ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் பொருளாதார சுதந்திரத்துக்காக அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் பங்காற்ற ஆரம்பித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டுக்காக ஒன்றுபடுகையில் கோஷமிடும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, ஜீ.எல். பீரிஸ், நாலக கொடஹேவா மற்றும் டலஸ் அழகப்பெரும போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மொரவக்க பிரதேசத்தில் நேற்று (06) வெள்ளிக்கிழமை நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
“அரசு தற்போது முன்னெடுக்கும் ஏற்றுமதி பொருளாதாரத்தை தாமும் முன்னெடுப்பதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கையில் இறக்குமதி பொருளாதாரத்தை மேற்கொள்ள வேண்டும் எனச் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகின்றார். இந்த முரண்பாடான கருத்துக்களை தேசிய மக்கள் சக்தி நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
நாடு நெருக்கடியிலிருந்து மீள 60 கோடி அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்பதையும் சொன்னேன். எம்மிடம் திட்டம் ஒன்றுமில்லை என்று எதிர்த்தரப்பினர் அன்று விமர்ச்சித்தனர். அதனால் நாம் தோற்றுப்போனோம்.
அப்போது சிலர் உண்மை கூறித் தோற்பதற்குப் பதிலாக பொய் சொல்லி வென்றிருக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் எமது கொள்கையில் மாற்றமில்லை.
எவ்வாறாயினும் நாம் அன்று கூறியவாறு நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தேவையான நிதியை தேடிக்கொண்டிருக்கின்றோம். ஐ.எம்.எப். மற்றும் கடன் வழங்கிய 18 நாடுகளின் உதவியுடன் 16 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தேடிக்கொண்டுள்ளோம்.
தற்போது ஐ.எம்.எப். எமக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதனால் மக்களுக்குச் சேவை செய்வதற்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டியிருந்தது.
அதற்காகவே விருப்பம் இல்லாமலேனும் வற் வரியை அதிகரித்தோம். அதனைச் செய்ததாலேயே நாட்டில் பணவீக்கம் குறைந்து ரூபாவின் பெறுமதி அதிகரித்து. அதன் பலனாக பொருளாதாரம் நிலைதன்மையை அடைந்தது. இன்று முன்னோக்கிச் செல்கின்றோம்.
அதேபோல் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம். நிவாரணம் பெறும் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளோம். சமுர்த்தி போன்று மூன்று மடங்கு நிவாரணம் இன்று கிடைக்கின்றது.
பின்னர் உறுமய திட்டத்தில் காணி உறுதிகயை வழங்குகின்றோம். அரச ஊழியர்களுக்குச் சம்பளம், வாழ்வாதாரக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது. அடுத்த வருடத்துக்கான சம்பள அதிகரிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. உரத் தட்டுப்பாட்டையும் போக்கினோம்.
அதனால் பல பொருட்களின் விலைகள் குறைந்தன. சில பொருட்களின் விலைகள் 10 சதவீதத்தால் குறைந்துள்ளதோடு சில பொருட்களின் விலகள் 40 சதவீதம் வரையில் குறைந்தன. எவ்வாறாயினும் இன்னும் ஐந்து வருடங்களுக்கு சரியான பாதையில் பொருளாதாரத்தை கொண்டுச் செல்வதற்கான திட்டத்தை முன்மொழிந்திருக்கின்றோம்.
சஜித்துக்கோ அனுரவுக்கோ இந்தத் திட்டங்கள் இல்லை. நான் பொருளாதார பரிமாற்றச் சட்டமூலத்தை சமர்ப்பிக்கும்போது சுனில் ஹந்துன்நெத்தி போன்றவர்கள் அதற்கு எதிராக வழக்குத் தொடுத்தனர். அதனால் அனுரகுமார சொல்லும் விடயங்களுக்கு முரனாணதாகவே ஹந்துன்நெத்தியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
அதேபோல் உள்நாட்டு வௌிநாட்டு முதலீட்டாளர்களை புறக்கணிக்கும் வகையிலான கொள்கைகளை குறிப்பிட்டுள்ளனர். அது பற்றி நாட்டு மக்களுக்கு தௌிவுபடுத்த வேண்டும். இன்று திசைக்காட்டி எந்தப் பக்கம் சுற்றுகிறது என்பது அவர்களுக்கு புரியவில்லை.
இன்று நாட்டில் மாற்றம் செய்யப் போவதாகக் கூறுகின்றார்கள். ஆனால் அதற்கான எந்த விடயங்களும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை.
ஆனால் நாம் பல்வேறு மாற்றங்களைச் செயலில் காட்டியிருக்கின்றோம். ஜனசபா, இளையோர் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல மாற்றங்களைச் செய்தோம். ஊழல் எதிர்ப்புக்கான தெற்காசியாவின் வலுவான சட்டத்தை நிறைவேற்றியிருக்கின்றோம்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது நாம் செய்து காட்டுகின்றோம். எனவே அனுரகுமார திஸாநாயக்க எமது கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். இயலும் ஸ்ரீலங்கா நாட்டின் முன்னேற்றத்துக்கான திட்டம். நெருக்கடியின்போது முடியாது என்று ஓடியவர்களால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. எனவே, சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.” – என்றார்.