வாகனச் செலவுகளை 80 வீதம் குறைக்கத் திட்டம்: தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ள ரொஷான் ரணசிங்க

0
43

சுயாதீன ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ரொஷான் ரணசிங்க தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாகனச் செலவுகளை தற்போதைய விலையிலிருந்து சுமார் 80 வீதம் குறைக்கும் திட்டங்களை உள்ளடக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஏனைய வேட்பாளர்கள் முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனங்கள் சாத்தியமற்றது என்றும் அவர் விமர்சித்தார்.

வரி செலுத்துவோர் நிதியளிக்கும் வாகனங்களை அனுபவிக்கும் சட்டமியற்றுபவர்களுக்கும் அவற்றை கொள்வனவு செய்ய முடியாத சாதாரண குடிமக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும் அவர் இதன்போது எடுத்துரைத்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ரொஷான் ரணசிங்க,

“ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியமான தீர்வை முன்வைக்கவில்லை. 2010 Toyota Prius இறக்குமதி செய்ய 20 மில்லியன் ரூபா செலவாகிறது. வரிக்கொள்கைகளே காரணம். ஆனால் 2.2 மில்லியன் ரூபாவிற்கு அதனை இறக்குமதி செய்யலாம்.

அதேபோன்று 2010 அக்வா இறக்குமதி செய்வதற்கு 10 மில்லியன் ரூபா செலவாகிறது. அதனையும் 1.7 மில்லியனுக்கு இறக்குமதி செய்யலாம்.

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொருளாதாரத் திட்டங்களின் கீழ் வாகன இறக்குமதி செலவுகளை குறைப்பதற்கான விரிவான திட்டங்கள் வெளிப்படுத்தப்படும்.

வாகன வகைகள் சிலவற்றிற்கான சந்தையை நாம் திறந்தால், நமது டொலர் செலவினத்தை குறைந்தபட்சம் 20% குறைக்கலாம், அந்நியச் செலாவணியை மீதப்படுத்தலாம்” என்றார்.