முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மனுஷ நாணயக்கார வெளிநாட்டு வேலைகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவதாக கூறி பணம் பெற்றதாக வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிட்டமைக்கு எதிராகவே இவ்வாறு நட்டஈடு கோரப்பட்டுள்ளது.
இஸ்ரேல் (Israel) மற்றும் கொரியா (Korea)ஆகிய நாடுகளுக்கு வேலைகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்காக கையொப்பமிடுவதற்கு மனுஷ நாணயக்கார பணம் பெற்றுக்கொள்வதாக வசந்த சமரசிங்க முன்வைத்த கருத்துக்கள், முற்றிலும் பொய்யானது என இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்கார பொறுப்பில் இருந்த போது அதிகளவானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்பப்பட்டனர்.
அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரப்பட்டுள்ளது.
14 நாட்களுக்குள் நட்டஈடு தொகையை வழங்காவிடின் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்” என இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.