2019இல் கோட்டாவுடன், 2024இல் அனுரவுடன்: ரணிலின் டீல்கள் குறித்து சஜித் விளக்கம்

0
44

“220 இலட்சம் மக்கள் முன்னிலையில் கீரியும் பாம்பும் ஒன்றாக இணைகின்ற நிகழ்வு இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அரசியல் திருமணம் இடம்பெறுகிறது.

இந்த இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்து மோசமான கூட்டமைப்பொன்றை உருவாக்கி என்னை தோல்வி அடையச் செய்ய முயற்சிக்கின்றார்கள்.“ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எஹலியகொட நகரில் இடம்பெற்றது பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு 200 மில்லியன் ரூபா செலவாகும். இவர்கள் இருவரும் கலந்தாலோசித்து ஜனாதிபதி பதவியையும் பிரதமர் பதவியையும் பிரித்துக்கொண்டால் 200 மில்லியன் செலவிலிருந்து குறைவடையும்.

இதுவரை காலமும் இவர்கள் நாடகமாடி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள். இது இவர்களுடைய டீல். இந்த டீலோடுதான் தபால் மூல வாக்களிப்புக்கு முந்தைய தினம் அரச ஊடகத்தில் உரையாற்றுவதற்கு அனுர குமாரவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்றும் சஜித் குற்றம் சுமத்தினார்.

எமது நாட்டு வரலாற்றிலே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஒருவர் தோல்வி அடைவேன் என தெரிவித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

தற்போதைய ஜனாதிபதி தோல்வி அடைவார் என அவரே தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க நினைத்திருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியாளர்களும், மொட்டுக் கட்சி ஆதரவாளர்களும் அந்த வாக்குகளை வீணடிக்காமல் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனவும் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.

”ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் வரலாற்றுக் காலம் நெடுகிலும் வழி தவற செய்கின்ற மற்றும் காட்டிக் கொடுக்கின்ற வேலையை செய்திருக்கின்றார்.

2019 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் தன்னை தோல்வி அடையச் செய்வதற்காக கோட்டாபய உடன் டீல் செய்து கொண்டார். அவருக்கு மக்களுடைய எதிர்பார்ப்புகள் குறித்த உணர்வுகள் இல்லை.

என்னிடம் பணத்திற்கான டீல் இல்லை. எமது டீல் மக்களுடனே. இன்று காணப்படுகின்ற சேறு பூசுகின்ற அழுக்கு அரசியலில் மக்களை ஏமாற்றி முட்டாளாக்குகின்ற கீழ்தரமான அரசியல் முறையை நாம் இல்லாதொழிக்க வேண்டும். இந்த நாட்டுக்கு உள்ள ஒரே மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியுமாகும்.

தான் தெற்கிலே வெற்றி அடைந்திருப்பதாக அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு சென்று கூறுகின்றார். அது வெறும் கனவு. அனுரவும் ரணிலும் அரசியல் ரீதியான சம்பந்த உறவு வைக்கின்ற போது ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களுடன் ஒப்பந்தம் செய்கின்றது.

திருடர்களுடன் எமக்கு டீல் இல்லை. எமது ஒரே பொறுப்பு துன்பத்தில் இருக்கின்ற மக்களை மீட்டெடுப்பதாகும்.” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.