பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை கொலை: ரகசியமாக குழி தோண்டி புதைத்த பெற்றோர்

0
83

இந்தியா, பொம்மன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு அவரது மனைவி டயானா. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கின்ற நிலையில் கடந்த மாதம் 27ஆம் திகதி டயானாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து 8 நாட்கள் கடந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி ரகசியமாக வீட்டுக்குப் பின்னால் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

குழந்தை இறப்பில் சந்தேகமடைந்த டயானாவின் தந்தை (உயிரிழந்த குழந்தையின் தாத்தா) சரவணன் குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உடற்கூராய்வு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வேப்பங்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்த அங்கு சென்றவேளை உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் இதனை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். குழந்தையின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பொலிஸாரின் விசாரணை மற்றும் ஆய்வில் குழந்தை நலமுடன் இருந்ததும் உடலில் எதுவித காயமும் ஏற்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக வீட்டுக்கருகிலிருந்த பப்பாளி மரம் மற்றும் எருக்கஞ் செடி இரண்டும் உடைக்கப்பட்டிருந்தது. எனவே இவற்றிலிருந்து பால் எடுக்கப்பட்டு குழந்தைக்கு ஊற்றி கொலை செய்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தலைமறைவான பெற்றோரை பொலிஸார் தேடி வந்த நிலையில் தனிப்படை பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.