அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக வேட்பாளர்கள் வழங்கிய வாக்குறுதிகள் நம்பமுடியாதவை என சர்வஜன அதிகாரம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று புதன்கிழமை கருத்து தெரிவித்த அவர் தான் முன்மொழிவது அரச ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான வேலைத்திட்டம் என சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த திலித்,
“சம்பளத்தை அதிகரிப்பதற்கான வழியில்லையென தற்போதைய ஜனாதிபதியே இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அவ்வாறு கூறிய அதே அரசாங்கம் 25% சம்பளத்தை உயர்த்தியுள்ளது.
இதற்கு 02 பில்லியனுக்கு மேல் தேவைப்படும். இதனை எவ்வாறு நம்புவது? அறிவுள்ள அரசு ஊழியர்களை அவமதிக்கும் செயலாகும்.
சம்பளங்கள் தர்க்கரீதியாக அதிகரிக்கப்பட வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பளத்தை அதிகரிக்க அனுரகுமார முன்மொழிந்துள்ளார். அது எப்படி சாத்தியமாகும்? பணம் எங்கிருந்து வரும்?
அரச துறை ஊழியர்களுடன் முறையான கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இது அறிவுசார்ந்த விவாதமாக இருக்க வேண்டும் தேவையான மானியங்கள், பணம், ஊக்குவிப்புத் தொகைகள், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.
திறமையான பொது சேவைக்காக அரசு ஊழியர்களுக்கு ஊக்குவிப்புத்தொகை வழங்கப்பட வேண்டும். நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். நன்றாக வேலை செய்யும் ஒருவர் அதிக ஊக்குவிப்புத்தொகையை பெற வேண்டும்.
இந்த வேட்பாளர்களின் அறிக்கைகள் வாக்குறுதிகள் மாத்திரமே. இலங்கையின் பொருளாதாரம் பற்றிய புரிதல் உள்ள உயர்தரம் படிக்கும் ஒரு மாணவனை கேட்டால், அவர் சொல்வார் இது நிறைவேற்றக் கூடிய வாக்குறுதி அல்ல என்று” என திலித் ஜயவீர மேலும் தெரிவித்தார்.