தேர்தலில் வெற்றிபெறும் பிரதான வேட்பாளர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அரச ஊழியர்களின் சம்பள உயர்வை இலஞ்சமாக கருதி வாக்குறுதியளித்ததன் காரணமாக வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றார்.
மேலும் கருத்து தெரிவித்த விஜயதாச,
“இந்த முக்கிய வேட்பாளர்கள் அனைவரும், அரச ஊழியர்களின் சம்பளம் 25000, 20000 மற்றும் 10000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என வாக்குறுதியளிக்கின்றனர்.
எனவே அரிசி மூடைகள் மற்றும் பிரியாணி விநியோகம் மூலம் வாக்காளர்களை கவர்வது ஜனாதிபதி பதவியை தகுதி நீக்கம் செய்வதற்கு போதுமான குற்றமாகும், அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை உறுதியளிப்பதும் லஞ்சமாகும்.
எனவே, எந்த பிரதான வேட்பாளர் வெற்றி பெற்றாலும் தேர்தல் மீறல் மனுக்களால் தகுதி நீக்கம் செய்யப்படுவார். ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் செலவுகள் தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
சில வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய அறிவிப்பு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தேவையான விசாரணைகளை ஆரம்பிக்கும். இறுதியில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என” அவர் மேலும் தெரிவித்தார்.