அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு: நாடாளுமன்றில் சஜித் கேள்வி

0
25

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு குறித்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,

“அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுக்கான செயற்பாடுகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பி இருக்கின்றேன்.

இலங்கை பூராகவும் மத்திய அரசாங்கத்திற்கு கீழும், மாகாண சபைகளுக்கு கீழும் 97800 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்றார்கள்.

இவர்கள் எவ்வளவு காலம் கடமையாற்றினாலும் அதில் பதவி உயர்வுக்கான செயல்முறைகள் இல்லை. அவர்கள் 30 வருடம் சேவையில் இருந்தாலும், அபிவிருத்தி உத்தியோகத்தர் தகைமையில் முதலாவது தரத்திற்கு மாத்திரமே செல்ல முடியும்.

எனவே இவர்களுக்காக பதவி உயர்வுக்கான செயற்பாடுகளை தயாரிக்க வேண்டும். இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பினாலும், அதற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை.

இந்த விடயம் குறித்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அதற்கான பதில்கள் கிடைக்கவில்லை. முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கும் இதே பிரச்சினை காணப்படுகின்றது” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.