இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இம்முறை 38 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் முக்கிய ஐந்து வேட்பாளர்கள் தீவிர பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஆகியோர் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து சமூக ஊடகங்களிலும் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. மேலும் கட்சித் தாவல்களும் இடம்பெற்று வருகின்றன. இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை தேர்தலை உண்ணிப்பாக கவனித்து வருகின்றன.
இம்முறை பிராதான வேட்பாளர்கள் அனைவரும் வெகுஜன ஊடகங்களை சற்று புறந்தள்ளி சமூக ஊடகங்களிலேயே தங்கள் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த தேர்தலில் வெற்றியாளரை தீர்மானிப்பதில் மிதக்கும் வாக்குகளும், வடக்கு, கிழக்கு தமிழர்களின் வாக்குகளும் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகின்றது.
ஏனெனில் தென்னிலங்கையை பொருத்தவரையில் சிங்கள வாக்குகள் பிரதான நான்கு வேட்பாளர்களுக்கும் பிரிந்துச் செல்லும் நிலையில், மிதக்கும் வாக்குகளும், வடக்கு, கிழக்கு தமிழர்களின் வாக்குகளே வெற்றியாளரை தீர்மானிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாகவே, வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதில் தென்னிலங்கையை சேர்ந்த பிரதான நான்கு வேட்பாளர்களும் வடக்கிலும், கிழக்கிலும் தீவிரமான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது வேட்பாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது மொழிப் பிரச்சினையாகும். தமது கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வதில் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால், தமிழ் – சிங்கள மொழிப் பெயர்ப்பாளர்களை பயன்படுத்தி வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் செயற்பாடுகளில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் மொழிப்பெயர்ப்பாளரின் பங்கு மிக முக்கியமாக இருக்கின்ற நிலையில், அவர்கள் விடும் சில தவறுகள் பெரும் கேலிக்குள்ளாவது உண்டு.
அப்படி இம்முறை நடந்த இரு சம்பவங்கள் தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளதுடன், பெரும் கேலிக்குள்ளாகியுள்ளது.
இதில் ஒரு சம்பவம் யாழ்ப்பாணத்திலும், மற்றொன்று கிழக்கு இலங்கையிலும் நடந்துள்ளது. இதன்போது நடந்த தவறான மொழிப்பெயர்ப்பு பெரும் கேலிக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவுக்கு ஆதரவாக நடந்த பிரச்சார் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பேசிய போது நடந்த தவறான மொழிப்பெயர்ப்பு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அதேபோல் தேசிய மக்கள் சக்தி சார்பில் கிழக்கு இலங்கையில் நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் போது அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி உரையாற்றிய போது நடந்த மொழிப்பெயர்ப்பும் தற்போது கேலிக்குள்ளாகியுள்ளது.