மலையாள திரையுலகில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் குறித்த நீதியரசர் ஹேமா கமிட்டி அறிக்கை கேரளாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதில் முன்னணி நடிகர்களான மோகன்லால், நிவின் பாலி உள்ளிட்ட நடிகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள்.
இந்நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக கருதப்படும் நிவின் பாலி, ஒரு வருடத்திற்கு முன்பு தன்னை டுபாயில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 40 வயது பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் நிவின் பாலி மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள நிவின் பாலி, தனக்கான நீதியையும் உண்மையையும் நிரூபிப்பதற்கு சாத்தியமான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டில் முதல் பிரதிவாதியாக பெண் ஒருவரும், ஆறாவது பிரதிவாதியாக நிவின் பாலி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்பு டுபாயில் நடந்ததாக கூறப்படுகிறது.
பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்ட சில மணி நேரத்தில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிவின் பாலி மறுத்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தீர்மானித்துள்ளதாகவும், இதற்குக் காரணமானவர்களை அம்பலப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் “இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும்” என்றும் இறுதிவரை போராடுவேன் என்றும் அவர் கூறினார்.
“இதற்கு எதிராக நான் போராடுவேன், எனக்காக மட்டுமல்ல, எதிர்காலத்தில் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளக்கூடிய மற்றவர்களுக்காகவும்” போராடுவேன் என்று அவர் கூறினார்.