தற்போதுள்ள பொருளாதாரம் தனது தலைமையின் கீழ் நிலையானதாக இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் கீழ் உள்ள இருதரப்பு கடன் மற்றும் பலதரப்பு கடன் உடன்படிக்கைகள் உட்பட பல முக்கிய பொருளாதார பிரச்சினைகள் குறித்து அவர் உரையாற்றினார்.
“முதலாவதாக, தற்போதைய பொருளாதாரம் எந்த வகையிலும் வீழ்ச்சியடைய அனுமதிக்கப்படாது என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம், இந்தப் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரமாகவும் வலுவாகவும் முன்னோக்கி நகர்த்துவதுதான் மக்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள ஒருமித்த கருத்து.
நாங்கள் இந்த நாட்டின் குடிமக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய இயக்கம். பொறுப்புக்கூறலுக்கு அர்ப்பணிப்புள்ள இயக்கம்” என்றார்.
“இந்த நேரத்தில்,எவரேனும் ஒருதலைப்பட்சமாக, திட்டத்திலிருந்து விலக நினைத்தால், அது குடிமகன் அல்லது நாட்டிற்கான பொறுப்பை கைவிடுவதாகும் எனவே, சர்வதேச நாணய நிதிய திட்டத்தில் இருந்து எந்த ஒருதலைப்பட்சமான வழியிலும் விலக நாங்கள் எதிர்பார்க்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம்” என்றார்.
அடுத்த ஆண்டு முதன்மை இருப்பு இலக்கை 2.3% இல் பேணுதல் மற்றும் 2032 ஆம் ஆண்டளவில் கடன் விகிதத்தை 98 வீதமாகக் குறைத்தல் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் அளவுகளை நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தியின் அர்ப்பணிப்பை அனுர கோடிட்டுக் காட்டினார்.