தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் அவசியம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் வேண்டும் என்பது மருத்துவ ரீதியிலான உண்மை.
ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அதாவது 30 நிமிடங்கள் மட்டுமே ஒருவர் தூங்குகிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ஜப்பானைச் சேர்ந்த 40 வயதாகும் டைசுக்கே ஹோரி (Daisuke Hori). வடக்கு ஜப்பானில் உள்ள ஹியோகோ (Hyogo) மாகாணத்தைச் சேர்ந்த ஹோரி தனது உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்துக்குப் பழக்கப்படுத்தி உள்ளதாகவும், அதன்மூலம் தனது செயல்படும் திறன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
யோமியூரி Yomiuri தொலைக்காட்சி ஹோரியின் அன்றாட செயல்பாடுகளை 3 நாட்களுக்குத் தொடர்ந்து Will You Go With Me? என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்பியது. ஆச்சரியப்படும் வகையில் நாள் ஒன்றுக்கு 26 நிமிடமே தூங்கிய கோரி அதிக சுறுசுறுப்பாக தனது வேலைகளைச் செய்துள்ளார்.
உணவு உண்பதற்குப் பல மணி நேரத்துக்கு முன்னர் உடற்பயிற்சி செய்வதும், காப்பி குடிப்பதும் தூக்கக்கலகத்தை நீக்கும் என்று தெரிவிக்கிறார் ஹோரி. கடந்த 2016 முதல் குறைந்த தூக்கத்திற்கான பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார் ஹோரி. இதுவரை 2100 பேரை ultra-short sleepers ஆக ஹோரி தயார் படுத்தி உள்ளாராம் அவர்.
61 வருடமாக தூங்காத தாய் கோக்
அதேவேளை வியட்நாமை சேர்ந்த 80 வயது தாய் கோக் (Thai Ngoc) என்பவர் கடந்த 61 வருடங்களுக்காகத் தான் தூங்கவே இல்லை என்று கூறி பலரையும் ஆச்சரியப்பட வைத்தவர்.
1962 இல் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட அவர் அதன்பின் தனது தூங்கும் திறனை இழந்துவிட்டதாகவும், மருந்து மற்றும் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டும் தன்னால் தூங்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.