ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வியாழக்கிழமை (29) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது.
இதனை உறுதி செய்யும் வகையில் ரணில் விக்கிரமசிங்க தனது முகப்புத்தகத்தில் பதவிட்டுள்ளார். குறித்த பதிவில் ”இங்கு இன்று காலை 9 மணி முதல் இலங்கைக்கான எனது கொள்கை பிரகடணம் முன்மொழியப்படும்.
அடுத்த ஐந்து வருடங்கள் என்னால் முடிந்த அனைத்தையும் நாட்டுக்காக செய்வேன். நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவேன். அடுத்த ஐந்து வருடங்களும் இலங்கைக்கு வெற்றிகரமானது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
“இயலும் ஸ்ரீலங்கா” என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்தக் கொள்கை அறிக்கை, நாட்டை திவால் நிலையில் இருந்து பொருளாதார சுபீட்சத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக நாட்டை வளர்ச்சியடைந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான அடிப்படை நடவடிக்கைகள் “இயலும் ஸ்ரீலங்கா ” கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
இலங்கையின் அனைத்து மக்களுக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவது “இயலும் ஸ்ரீலங்கா” கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்த இலங்கை படிப்படியாக மீட்சியடைந்ததன் பின்னர் மேலும் ஒரு அடியை முன்னெடுப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.